தேடப்படும் குற்றவாளி என்று நினைத்து சவுதி நாட்டவரை கைது செய்த பிரான்ஸ்: வழக்கில் புதிய திருப்பம்
சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என நினைத்து, தவறான நபரை கைது செய்துவிட்டதாகக் கூறி, அவரை விடுவித்துள்ளது பிரான்ஸ்.
பாரீஸ் விமான நிலையம் ஒன்றிலிருந்து ரியாத் செல்வதற்காக விமானம் ஏற முயன்ற Khalid al-Otaibi என்ற நபரை பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு பொலிசார் செவ்வாயன்று கைது செய்தார்கள்.
சவுதி ஊடகவியலாளரான ஜமால் கஷோகி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் பெயரும் Khalid al-Otaibiதான். ஆகவே, அவர்தான் இவர் என முடிவு செய்த பொலிசார் இந்த நபரைக் கைது செய்தார்கள்.
சவுதி அரேபிய அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் 2018ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது. ஆனால் சவுதி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.
ஜமால் கொலையில் தொடர்புடைய Khalid al-Otaibi என்பவர் மீது துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அந்த கைது வாரண்டின் அடிப்படையில், பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்திலிருந்து ரியாத் செல்வதற்காக விமானம் ஏற முயன்ற Khalid al-Otaibi என்ற அதே பெயரையுடைய இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், கைது செய்யப்பட்ட Khalidக்கும் ஜமால் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய பாரீஸிலுள்ள சவுதி தூதரகம், உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியது. சவுதியில் Khalid al-Otaibi என்ற பெயர் பலருக்கு வைக்கப்படும் ஒரு பொதுவான பெயர் என்றும், பிரான்ஸ் யாரை கைது செய்ததாக நினைத்துள்ளதோ, அந்த Khalid, ஏற்கனவே ஜமால் வழக்கில் சவுதியில் சிறையிலிருப்பதாகவும் சவுதி பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் உண்மையாகவே ஜமால் கொலையுடன் தொடர்புடையவர்தானா என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை பிரான்ஸ் மேற்கொண்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபருக்கும் துருக்கி பிறப்பித்த அந்த வாரண்டுக்கும் சம்பந்தமில்லை என தெரியவந்ததையடுத்து பாரீஸ் அதிகாரிகள், அவரை விடுவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.