நவம்பர் 1 வரைதான் அவகாசம்... பிரித்தானியாவுடன் மீண்டும் பனிப்போரைத் துவக்கும் பிரான்ஸ்
பிரான்ஸ் பிரித்தானியாவுடன் மீண்டும் பனிப்போரைத் துவக்கும் வகையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பாரீஸ் கடல்வள அமைச்சரான Annick Girardin, பிரெஞ்சு படகுகள் பிரித்தானிய கடற்பரப்பில் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கு, போரிஸ் ஜான்சன் அரசுக்கு நவம்பர் 1 வரை காலக்கெடு விதித்துள்ளதாகவும்,
அதற்குப் பின்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றால், பிரித்தானியாவுக்குச் சொந்தமான சேனல் தீவுகளுக்கு மின்சாரத்தை துண்டித்து விடுவதாகவும் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரச்சினை என்னவென்றால், பிரெக்சிட்டுக்கு முன், அதாவது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது, பிரான்ஸ் மீனவர்கள் பிரித்தானிய கடல் பரப்பில், 6 முதல் 12 மைல் தொலைவுக்கு மீன் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முன்பு எந்தெந்த படகுகள் முன்பு அவ்வளவு தூரம் வரை சென்று மீன் பிடித்தன என்பதை நிரூபிக்கின்றனவோ, அவற்றிற்கு மட்டுமே இனி பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி என பிரித்தானியா கூறிவிட்டது.
இப்போது அதாவது பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானிய கடல் பரப்பில் மீன்பிடிப்பதற்கு விண்ணப்பித்துள்ள பிரான்ஸ் மீன் பிடி படகுகளில், அப்படி நிரூபித்துள்ளவைக்கு மட்டுமே பிரித்தானியா உரிமம் வழங்கியுள்ளது.
ஆனால், மீன் பிடிக்க அனுமதி கோரிய படகுகளில் 40 சதவிகித படகுகளுக்கு மட்டுமே பிரித்தானியா உரிமம் வழங்கியுள்ளதாகக் கூறி பிரான்ஸ் தரப்பு ஆத்திரப்படுகிறது.
இந்நிலையில்தான், பாரீஸ் கடல்வள அமைச்சரான Annick Girardin, தாங்கள், பிரெஞ்சு படகுகள் பிரித்தானிய கடற்பரப்பில் மீன் பிடிக்க அனுமதிப்பதற்கு, போரிஸ் ஜான்சன் அரசுக்கு நவம்பர் 1 வரை காலக்கெடு விதித்துள்ளதாக, பிரெக்சிட்டுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளை தலைமையேற்று நடத்தியவரான, ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவரான Maros Sefcovic மற்றும் மீன்வளத்துறைக்கு பொறுப்பான ஆணையரான Virginijus Sinkevicius ஆகியோருடனான கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.
தேவையானால் நவம்பர் 1ஆம் திகதிக்குப் பின் (பிரித்தானியாவுக்கு எதிராக) பதில் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, பிற துறைகளைச் சேர்ந்த தன் சக அமைச்சர்களுடன் இணைந்து தயாராகிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.