தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... பிரான்சில் ஐந்தாவது அலை உருவாகுமா?
பிரான்சில் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஐந்தாவது கொரோனா அலை உருவாகலாம் என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதுபோன்ற ஒரு சூழல் கடந்த இரண்டு மாதங்களாக காணப்படவில்லை என பிரெஞ்சு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6,483. 2020 நவம்பரை ஒப்பிடும்போது இது ஐந்து மடங்கு குறைவுதான்.
ஆனால், ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு கொரோனா பரவும் என்பதைக் காட்டும் reproduction rate, மீண்டும் 1.0வைத் தாண்டிவிட்டதுதான் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த reproduction rate, 1.0வைத் தாண்டிவிட்டால், கொள்ளைநோய் பரவல் அதிகரிக்கிறது என்று பொருள். அக்டோபர் 16ஆம் திகதி நிலவரப்படி இந்த reproduction rate 1.05 ஆக உள்ளது. அது செப்டம்பர் மாத மத்தியில் 0.71ஆகத்தான் இருந்தது.
செவ்வாய் நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் புதிதாக 5,934 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது, இது சற்று அதிகம். பிரான்சில் இதுவரை கிட்டத்தட்ட 7.1 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.