பணம் கொடுங்கள் இல்லையென்றால்... பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் விடுத்துள்ள மிரட்டல்
பிரித்தானியா பணம் கொடுக்கவில்லையென்றால் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்காமல் விட்டுவிடுவோம் என பிரான்ஸ் மிரட்டியுள்ளது.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல், அதற்காக பிரான்ஸ் எல்லை பாதுகாப்புப் படைக்கு பல மில்லியன் பவுண்டுகள் வழங்கவும் முன்வந்தார்.
அதன்படி பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
ஆனால், சில வாரங்களுக்குப் பின், தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய அவர், இதுவரை நாம் பிரான்சுக்கு ஒரு பென்னி கூட கொடுக்கவில்லை. பிரான்ஸ் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அதற்கு அந்த பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இது ஒரு நிபந்தனையின் பேரில் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பலன் கிடைத்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்பது நிபந்தனை. ஆனால், இதுவரை நமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார் பிரீத்தி.
சொன்னபடி பிரித்தானியா பணம் கொடுக்காததால், கலாயிஸ் துறைமுகத்தில் புலம்பெயர்வோரை தடுக்கும் பணியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டு தளபதியான General Frantz Tavart கோபமடைந்துள்ளார்.
ஆகவே, பிரித்தானியா நிதி உதவியை நிறுத்திவிடுவதாக மிரட்டியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் நிதி உதவியை நிறுத்தினால், நாங்கள் பாதுகாப்புக்காக கலாயிஸ் துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் எங்கள் இராணுவ வீரர்களை அங்கிருந்து விலக்கிக்கொள்வோம்.
எங்களைப் பொருத்தவரை, பிரித்தானியா செய்துள்ளது நன்றிகெட்டத்தனம் என்று கூறியுள்ளார் General Frantz.