பிரான்ஸ் சிறுமி கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்... மலேசியாவிலுள்ள நபரை நோக்கி திரும்பும் வழக்கு
பிரான்சில் சொந்த தாயாலேயே கடத்தப்பட்ட சிறுமி ஒருத்தி சுவிட்சர்லாந்தில் மீட்கப்பட்ட நிலையில், வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முந்தைய செவ்வாய்க்கிழமை, கிழக்கு பிரான்சிலுள்ள Vosges என்ற இடத்தில் அமைந்துள்ள, தனது பாட்டியின் வீட்டிலிருந்து, மியா என்ற 8 வயது சிறுமி கடத்தப்பட்டாள்.
நேர்த்தியாக திட்டமிட்டிருந்த கடத்தல்காரர்களில் மூவர் தங்களை சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு மியாவை அழைத்துச் செல்ல, நான்காவது நபர் தயாராக காரில் காத்திருந்திருக்கிறார்.
குழந்தையைக் கடத்திச்சென்று, 20 நிமிடங்களில் அதன் தாயாகிய லோலா (28) என்னும் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்கள் அவர்கள் நால்வரும். அந்த குழந்தை, தாயிடமிருந்து சட்டப்படி பிரிக்கப்பட்டு அதன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்திருக்கிறது.
பின்னர், குழந்தை மியாவைக் கடத்திய நான்கு பேரும் பொலிசாரிடம் சிக்கினார்கள். அவர்கள், தங்களை ஒருவர் இணையம் வாயிலாக தொடர்புகொண்டதாகவும், அவர் திட்டத்துக்கேற்ப குழந்தையைக் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சுவிஸ் எல்லையிலுள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள பழைய தொழிற்சாலை ஒன்றில், தாயும் மகளும் கண்டுபிடிக்கப்பட்டார்கள். குழந்தை மியா பத்திரமாக மீட்கப்பட, லோலா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், வழக்கில் யாரும் எதிர்பாராதவிதமாக மலேசியாவிலிருக்கும் வேறொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
5 G மொபைலும், மாஸ்குகளும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த Rémy Daillet-Wiedemann (55)என்பவருக்கு, மியா கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இது கடத்தலே அல்ல, ஒரு குழந்தை அதன் தாயின் வேண்டுகோளின் பேரில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் Wiedemann கூறியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசாரின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.
பிரான்சில் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்த Wiedemann, தனது சர்ச்சைக்குரிய இயக்கத்தின் கருத்துக்களுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியிடும் Wiedemann, தான் பிரான்சை மீட்பதற்காக
ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், மக்களுக்கு சுதந்திரம் அளிக்க
இருப்பதாகவும், வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தது கவனம் ஈர்த்தது
குறிப்பிடத்தக்கது.