பிரான்சில் வருமான வரிச் சோதனைக்கு சென்ற அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்
பிரெஞ்சு நகரம் ஒன்றில் தனது உதவியாளரான பெண் ஒருவருடன் வருமான வரிச் சோதனைக்கு சென்ற அதிகாரி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஆய்வுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்
பிரான்சிலுள்ள Arras என்னும் நகரில் அமைந்துள்ள புராதன பொருட்கள் வாங்கி விற்கும் நபர் ஒருவர் வீட்டுக்கு ஆவணங்களை சோதிப்பதற்காக வருமான வரித்துறை அதிகாரி ஒருவரும்,அவரது உதவியாளரான ஒரு பெண்ணும் சென்றுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
பின்னர் அந்த வீட்டில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்குத் தகவல் கிடைக்க, அவர்கள் அங்கு விரைந்துள்ளார்கள்.
வீட்டுக்குள் சென்ற பொலிசார் அங்கு அந்த அதிகாரியும், அவரது உதவியாளரும் கட்டிவைக்கப்ப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
அவர்களை பரிசோதித்தபோது, அந்த அதிகாரி கத்தியால் பலமுறைக் குத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உதவியாளரான அந்தப் பெண், தன் கண் முன்னே தனது மூத்த அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
பின்னர் அந்த வீட்டை பொலிசார் ஆய்வு செய்தபோது, 46 வயதான அந்த கொலையாளி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தன் பணியைச் செய்யச் சென்ற ஒரு அதிகாரி கொடூரமாக கொல்லப்பட்ட விடயம் பிரான்சில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றம் அவருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி கௌரவித்தது.
இதற்கிடையில், அந்த அதிகாரியின் கொடூர முடிவு, தங்கள் பணி எவ்வளவு ஆபத்தானது என தங்களுக்கு காட்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் யூனியன் தெரிவித்துள்ளது.