ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் விளையாடத் தடை: பிரான்ஸ் கருத்து
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயம், உலகை பின்னோக்கி அழைத்துச் செல்வதாக பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் விளையாடத் தடை
2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், நியூசிலாந்து லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) என்னும் திருநங்கை பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் வெற்றிபெற்ற விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

2013ஆம் ஆண்டு தன்னை திருநங்கை என அறிவித்த லாரல், அதற்கு முன் ஆண்கள் பிரிவில் பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றுவந்தார்.
இந்நிலையில், ஆணாக இருந்து பின் திருநங்கையாக மாறியவர்களை பெண்கள் பிரிவு போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிப்பது எப்படி நியாயமாகும் என விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், 2028இல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து, இனி பெண்கள் பிரிவு போட்டிகளில் பெண்கள் மட்டுமே விளையாட தகுதி பெறுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
அதாவது, பெண்கள் பிரிவில் விளையாடுபவர்கள் பெண்கள்தான் என்பதை மருத்துவ ரீதியில் நிரூபிக்கும் வகையில் இனி மரபணு சோதனைகள் நடத்தப்படும்.
இந்நிலையில், பெண்களுக்கு மரபணுப் பரிசோதனையை அறிமுகப்படுத்தும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவு, ஒரு பின்னோக்கிய நடவடிக்கை என பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சரான மரீனா ஃபெராரி விமர்சித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை, நெறிமுறை, சட்ட மற்றும் அறிவியல் ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்தப் புதிய கொள்கையைப் பாராட்டியுள்ளார்.
இது தன்னால்தான் சாத்தியமானது என்று அவர் கூற, மரீனாவோ, 1967இல் இப்படி ஒரு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், 1999இல் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து பெண்களுக்கு மரபணு சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நிறுத்தபட்டது.
ஆக, மீண்டும் அதை துவங்குவது, உலகை பின்னோக்கி அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளது என்றும், இந்த முடிவு வருந்தத்தக்கதாக அமைந்துள்ளது என்றும் ஃபெராரி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |