பிரான்சில் பரபரப்பான சைக்கிள் பந்தயத்தில் ஒரு ரசிகையால் நிகழ்ந்த களேபரம்: வலைவீசி தேடும் பொலிசார்
பிரான்சில் நடைபெற்ற பிரபல சைக்கிள் பந்தயம் ஒன்றில் ரசிகை ஒருவரால் பயங்கர களேபரம் ஏற்பட்டது. பிரான்சில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து வீரர்கள் கலந்துகொள்ளும் பிரபல சைக்கிள் பந்தயமான Tour de France என்னும் பந்தயம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
வெற்றிக் கோட்டை அடைவதற்கு இன்னும் 30 மைல் தொலைவே இருக்கும் நிலையில், வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக வாசகம் ஒன்று எழுதப்பட்ட அட்டை ஒன்றை கையில் வைத்துக்கொண்டு பந்தயத்தை ரசித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் சற்றே முன்னோக்கி நகர, அவர் கையிலிருந்த அட்டை வீரர் ஒருவரின் சைக்கிளைத் தட்ட, வேகமாக வந்த அவர் நிலை குலைந்து விழ, அடுத்தடுத்து வந்த வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழ, அந்த இடமே களேபரமாயிற்று.
போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவரான பிரித்தானிய வீரர் Chris Froome மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஒரு விநாடிக்குள் 50 முதல் 60 பேர் வரை கீழே விழுந்துவிட்டதாக தெரிவிக்கிறார். சுமார் 21 வீரர்கள் வரை இந்த சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Crazy crash at Tour De France 2021 🇫🇷
— Nigel D'Souza (@Nigel__DSouza) June 26, 2021
A fan who was holding a message to her grandparents & grinning for the cameras took out most of the peloton with a cardboard sign 🚴♀️ 🚴♂️ 🚴 #TDF2021 pic.twitter.com/OEZmiSjBE9
இதற்கிடையில் விபத்துக்கு காரணமான அந்த இளம்பெண் தலைமறைவாகிவிட்டார். நீல நிற ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்த அந்த பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சமூக ஊடகங்கள் மூலம் அவரை பிடிக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
பொலிசார், அவர் வேண்டுமென்றே பாதுகாப்பு விதிகளை மீறி காயம் ஏற்படுத்தி, மூன்று மாதங்கள் வரை சிலரை வேலை செய்யவிடாமல் செய்த குற்றத்திற்காக தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால், அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 13,000 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.