சரக்குக் கப்பலின் பாதையில் குறுக்கே வந்த புலம்பெயர்வோர் படகு: அச்சத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
ஆங்கிலக்கால்வாயில், புலம்பெயர்வோர் பயணிக்கும் படகொன்று சரக்கு கப்பல் ஒன்றை நெருங்கிய சம்பவம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சரக்குக் கப்பலை நெருங்கிய புலம்பெயர்வோர் படகு
திங்கட்கிழமை மதியம், சிறுபடகொன்றில் புலம்பெயர்ந்தோர் சிலர் பயணித்துக்கொண்டிருப்பதை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளார்கள்.
ஒரு சிறு ரப்பர் படகில் நெருக்கியடித்துக்கொண்டு பலர் உட்கார்ந்திருக்க, படகின் ஓரத்தில் சிலர் அபாயகரமான வகையில் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்திருக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் அந்தப் படகு வழி தவறி சரக்குக் கப்பல்கள் பயணிக்கும் பாதைக்குச் சென்றுள்ளது.
அப்போது பெரிய சரக்குக் கப்பல் ஒன்று வந்துகொண்டிருக்க, இந்த புலம்பெயர்வோர் படகு அந்த சரக்குக் கப்பலின் பாதையில் சென்றுகொண்டிருப்பதைக் கவனித்த பிரெஞ்சு போர்க்கப்பல் ஒன்று, மீட்புப் படகொன்றை அங்கு அனுப்பியுள்ளது.
புலம்பெயர்வோர் படகை சரக்குக் கப்பல் நெருங்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் பதற, அந்த மீட்புப் படகு புலம்பெயர்வோர் படகை சரக்குக் கப்பலின் வழியிலிருந்து விலகி அழைத்துக்கொண்டுவந்து விட்டுள்ளது.
சிறிது நேரத்தில் புலம்பெயர்வோர் படகு பிரித்தானிய எல்லைக்குள் நுழைய, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படையின் படகு, அவர்களை இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதை ஊடகவியலாளர்கள் கண்டுள்ளார்கள்.
பிரெஞ்சு பொலிசார் சரியான நேரத்தில் அந்த புலம்பெயர்வோர் படகை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வராதிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் அந்த ஊடகவியலாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |