அமெரிக்கா...பிரித்தானியாவுடன் கைகோர்த்து முதுகில் குத்திவிட்டது ஆஸ்திரேலியா! கொந்தளிக்கும் பிரான்ஸ்
தங்கள் நாட்டுடனான மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆசிய பசிபிக் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா வழங்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ஆஸ்திரேலியாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுடன் ஏற்பட்டுள்ள AI மற்றும் பிற தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய AUKUS என்றழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஒப்பந்தம் மிகவும் பொறுப்பற்றது என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரான்ஸ் அரசாங்கத்தின் Naval Group உடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஆஸ்திரேலிய அறிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் ஆஸ்திரேலியா பிரான்ஸை முதுகில் குத்தியுள்ளது என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian கொந்தளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் நம்பிக்கையான உறவை நாங்கள் ஏற்படுத்தினோம், இந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
நான் இன்று மிகவும் கோபமாக இருக்கிறேன், கசப்பாக இருக்கிறது. இது நட்பு நாடுகள் ஒருவருக்கொருவர் செய்யும் காரியம் அல்ல என்று அவர் கூறினார்.
இந்த திடீர் மற்றும் எதிர்பாராத முடிவு டிரம்ப்பை நினைவூட்டுகிறது என்று முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை குறிப்பிட்டு Jean-Yves Le Drian கூறினார்.