பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு பிரான்ஸ் சம்மன்: இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்!
பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தீவிரவாதத்திற்கெதிரான மசோதா ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கெதிரான பாகுபாட்டு அணுகுமுறையை சட்டங்களாக ஆக்கவேண்டாம் என்று கூறிய பாகிஸ்தான் அதிபரான Arif Alvi, அப்படி செய்யமுயன்றால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பிரான்ஸ் தலைமையை எச்சரித்திருந்தார்.
நீங்கள் மக்களை ஒன்று சேர்க்கவேண்டுமேயொழிய, பிரிவினையை உருவாக்கும் வகையில் ஒரு மதத்தின் மீது முத்திரை குத்தக்கூடாது என்றார் Arif Alvi.
ஒரு முழு மதத்தையும் வித்தியாசமான முறையில் முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கு எதிராக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுப்பது அச்சத்தை உருவாக்குவதுடன், இப்போதில்லாவிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் Arif Alvi.
Arif Alviயின் இந்த கருத்துக்களால் எரிச்சலடைந்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், பிரான்சுக்கான பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. (பாகிஸ்தான் பிரான்சுக்கான தூதரை இதுவரை தேர்ந்தெடுக்கவில்லையாம்).
பாகிஸ்தானின் கருத்துக்கள் தங்களை வியப்படைய வைத்துள்ளதாகவும், பாகிஸ்தான் அதிபரின் கருத்துக்களுடன் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், அந்த மசோதாவில் பாகுபாட்டை ஏற்படுத்தும் எந்த விடயமும் இல்லை என்றும், அது, தங்கள் நாட்டு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.