எங்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்... புலம்பெயர்வோர் பிரச்சினை தொடர்பாக பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்
பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்வதால் பிரித்தானியா தரப்பு கோபமடைந்துள்ள நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில், பிரித்தானியா எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலையில் இல்லை என்று கூறியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin, பிரித்தானியா எங்களை தங்கள் உள்நாட்டு அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையில் உரசல் முற்றியுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினை இருந்த நிலையில், தற்போது புலம்பெயர்வோர் பிரச்சினை கூடுதல் உரசலை ஏற்படுத்தியுள்ளது.
நாம் நமது பிரான்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு புலம்பெயர்வோர் ஆபத்தான வகையில் ஆங்கிலக் கால்வாயை கடப்பதைத் தடுக்க கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும் என பிரித்தானிய பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மட்டுமே 1,185 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்ததாக பிரித்தானிய தரப்பு தெரிவிக்கிறது. வெள்ளியன்று அப்படிக் கால்வாயைக் கடக்க முயன்ற மூவர் காணாமல் போனார்கள்.
இதற்கிடையில், ஏராளம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வது பிரித்தானியாவின் தவறு என ஒரு அர்த்தமற்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் Darmanin.
வடக்கு பிரான்சில் கலாயிஸ் மற்றும் Dunkirk பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படும் பிரித்தானிய சமூக ஆர்வலர்கள், பாதுகாப்புப் படையினரின் வேலைக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் Darmanin குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், பெண்களையும் குழந்தைகளையும் நாசமாக்கும் கடத்தல்காரர்களும் பெரும்பாலும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும், பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை, குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களை பகுதியளவுக்கு நம்பியிருப்பதும் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் அவர்.
பிரித்தானியா தனது சட்டங்களை போதுமான அளவுக்கு வலியதாக மாற்றியமைத்தால் புலம்பெயர்வோர் கலாயிஸிலோ Dunkirkஇலோ இருக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார் Darmanin.
ஆனால், பிரித்தானிய பிரதமரின் செய்தித்தொடர்பாளரோ, நாங்கள் இன்னமும் பிரான்சை பிரித்தானியாவின் நெருங்கிய கூட்டாளியாகத்தான் பார்க்கிறோம், இந்த பிரச்சினையை ஆக்கப்பூர்வமான வகையில் தீர்க்க எங்களாலானதைச் செய்யவே விரும்புகிறோம் என்கிறார்.