பிரான்சில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்ட இராணுவ அதிகாரிகள் பதவி பறிப்பு... ஓய்வூதியம் நிறுத்தம் சிறை என வரிசையாக அதிரடி நடவடிக்கைகள்
இஸ்லாமியவாதிகளால் பிரான்ஸ் சிதைந்துகொண்டிருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் அதிரடியாக குற்றம் சாட்டி இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுத்தனர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர்.
இது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், 20 ஜெனரல்கள், 80 ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் சாதாரண நிலையிலிருக்கும் 1,000 இராணுவத்தினர் உட்பட மொத்தம் 2,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த கடிதம் ஆட்சி புரிவோரை கடுமையாக எரிச்சலடையச் செய்த நிலையில், கடிதத்தில் கையெழுத்திட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுத்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் ஓய்வூதியம், பட்டம் முதலானவை பறிக்கப்படும் என நாட்டின் இராணுவ தலைமை எச்சரித்துள்ளது.
அந்த கடிதத்துக்கு ஆதரவளித்த, பணியிலிருக்கும் 18 இராணுவ அதிகாரிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என மிரட்டப்பட்டுள்ளார்கள். இராணுவ தலைவரான ஜெனரல் Francois Lecointre, ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட 2,000 பேரில் சிலரான ஜெனரல்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீது தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகள் இராணுவ கவுன்சிலுக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இறுதியில் ஜனாதிபதி அவர்களை பதவிநீக்கம் செய்யும் ஆணையில் கையெழுத்திடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த இராணுவத்தினருக்கு பாரீஸ் மேயர் ஒருவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர்கள் கடிதத்தில் எழுதியது உண்மை என்று கூறும் Rachida Dati (55) என்னும் அந்த மேயர், ஒரு பக்கம் கொரில்லா யுத்தங்கள், தீவிரவாத அச்சுறுத்தல் என இருக்கும் நிலையில், நாடு நன்றாக உள்ளது என்று கூற முடியாது என்று கூறுகிறார்.
Rachida Dati, பொலிசார் தீவிரவாதிகளில் இலக்காக மாறியுள்ளார்கள், இராணுவம் சிதையுமானால் சமுதாயம் சிதைந்துபோகும் என்கிறார்.
இந்த Rachida Dati, சாதாரண ஒரு மேயர் மட்டுமல்ல, முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozyயின் அரசில் நீதித்துறை அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்ல, 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.