மே 2 முதல் பிரான்சில் தளர்த்தப்படும் முக்கிய கட்டுப்பாடுகள்! கசிந்த தகவல்
பிரான்ஸில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஜனாபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தினசரி கொரோனா வழக்குகள் விரைவில் குறையும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை தளர்த்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் புதிதாக 43,098 பேருக்கு தொற்று உறுதியானது என்றும், 375 பேர் பலியாகினர் எனவும் செவ்வாய்க்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில், மே மாத நடுப்பகுதியில் உணவகங்களின் வெளிப்புற சேவைக்கு அனுமதி வழங்கவும், சினிமாக்கள், தியேட்டர்கள் மற்றும் அருங்காட்சியகங்களை குறிப்பிட்ட அனுமதி எண்ணிக்கையுடன் மீண்டும் திறக்கவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உறுதியாக இருக்கிறார்.
மக்கள் தங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் மற்றும் இரவு 7 மணி ஊரடங்கு என இரண்டு கட்டுப்பாடுகளும் மே-2ம் திகதி தளர்த்தப்படும் என தெரிகிறது.
மேலும் திங்கட்கிழமை முதல் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மே 3 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.