One in, one out திட்டம்: கைவிரித்த பிரான்ஸ்
France has indicated it wants to walk away from the 'one in, one out' migrant deal: பிரித்தானியாவுடனான 'one in, one out' ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியா, பிரான்சுடன் one in, one out என்னும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.
One in, one out ஒப்பந்தம்...
2025ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் one in, one out என்னும் ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் கையெழுத்திட்டன.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
கைவிரித்த பிரான்ஸ்
இந்நிலையில், பிரித்தானியாவுடனான 'one in, one out' ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், 'one in, one out' ஒப்பந்தம், அக்டோபர் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
அதன் பின், பிரான்ஸ் இந்த திட்டத்தைத் தொடர விரும்பவில்லை. இது குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரன்ட் (Laurent Nuñez), இந்த விடயத்தை பிரான்ஸ் மட்டும் தனியாக சுமக்கவேண்டியதில்லை என நாங்கள் கருதுகிறோம், அதாவது, புலம்பெயர்வோரைத் தடுக்கும் வகையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆகவே, அக்டோபர் மாதம் 1ஆம் திகதியுடன் 'one in, one out' ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அதை புதுப்பிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என நான் எனது சக உள்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூதிடம் தெளிவாகக் கூறிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் லாரன்ட்.
இதற்கிடையில், 'one in, one out' திட்டம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அத்திட்டத்தின் கீழ் ஒரு நபரை பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்த 56,000 பவுண்டுகள் செலவு பிடிக்கிறது, என்றாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் சுமார் 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆக, அது ஒரு நல்ல திட்டம்தான் என்கிறார்கள் சிலர்.
அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ருவாண்டா திட்டத்தால் செய்ய முடியாததை 'one in, one out' திட்டம் செய்துள்ளது. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு அது பலனளிக்கவில்லை என்கிறார்கள் புலம்பெயர்தல் நிபுணர்கள் சிலர்.