பிரான்சுடனான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு: பின்னணி
பிரான்சுடன் புலம்பெயர்தல் தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்தும் வகையில், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரெஞ்சு பொலிசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காகவும், பொலிசார் ரோந்துப் பணிகள் மேற்கொள்வதற்ககாவும், தடுப்புக் காவல் மையம் ஒன்றை உருவாக்குவதற்காகவும், பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகள் தர பிரித்தானியா ஒப்புக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரில் 50 சதவிகிதம் பேரை பிரெஞ்சு தரப்பு தடுத்து நிறுத்தியது.
ஆனால், போகப்போக, பிரெஞ்சு தரப்பு அபட்சியம் காட்டத் துவங்கிவிட்டதுபோல் தோன்றுகிறது, தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை, 50 சதவிகிதத்தில் இருந்து குறைந்து சுமார் 37 சதவிகிதமாகிவிட்டது.
இதற்கிடையில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள பிரித்தானியா தயாரானது.

புதிய ஒப்பந்தத்தின்படி, பிரான்ஸ் எத்தனை புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறதோ, அதற்கேற்ப பிரித்தானியா பிரான்சுக்கு நிதி வழங்கும் என்பது திட்டம்.
ஆனால், தற்போதைய ஒப்பந்தம் காலாவதியாகி, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள், இடைப்பட்ட காலகட்டத்தில் எத்தனை பேர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்னும் எண்ணம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் கவலையை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் 1,000 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புலம்பெயர்வோரை பிரான்ஸ் தடுத்து நிறுத்தினால் மட்டுமே பிரித்தானியா நிதி வழங்கும் என உறுதிபடக் கூறிவிட, புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |