பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு: பிரான்சுடனான உறவு எப்படி இருக்கும்?
கன்சர்வேட்டிவ் கட்சி சார்ந்த போரிஸ் ஜான்சன் பிரித்தானிய பிரதமராக இருக்கும்போதுதான் பிரெக்சிட் நிறைவேறியது.
தற்போது பிரதமராகியிருப்பவரும் அதே கட்சியினர் என்பதால், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமான உறவில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என பிரான்ஸ் தரப்பு கருதுகிறது.
பிரித்தானியாவில் பிரதருக்கான போட்டி மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி நண்பரா எதிரியா என்ற கேள்வி லிஸ் ட்ரஸ்ஸிடம் கேட்கப்பட்டது.
அப்போது, மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ்.
பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரானோ, பிரித்தானியா பிரான்சின் கூட்டாளி, அதன் மக்கள் எப்போதுமே பிரான்சின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள், யார் அதன் தலைவராக இருந்தாலும் சரி, தலைவர்கள் நண்பர்களாக இல்லையென்றாலும் சரி என்று லிஸ் ட்ரஸ்ஸின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது லிஸ் ட்ரஸ் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அப்படியானால், இனி பிரான்சுக்கும் லிஸ் தலைமையிலான பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Adrian Dennis/AFP via Getty Images
தன் கட்சிக்கு உண்மையானவரான லிஸ், நிச்சயம் ஐரோப்பாவின் மீதும், குறிப்பாக மேக்ரான் மீதும் கடுமையாகத்தான் இருக்கப்போகிறார், ஏனென்றால், அதுதான் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிலைப்பாடு என்கிறார் பாரீஸுக்கான முன்னாள் பிரித்தானிய தூதரான Peter Ricketts.
பிரெக்சிட்டுக்கு முன், மில்லியன் கணக்கில் மக்கள் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் பயணித்துவந்தார்கள், எளிதாக.
அதேபோல், பெருமளவில் சரக்குப் போக்குவரத்தும் தடையின்றி நடைபெற்று வந்தது. ஆனால், பிரெக்சிட்டுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து எரிச்சலூட்டுவதாக ஆகிவிட, அந்த எரிச்சல் இன்னும் மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
ஆக, லிஸ் ட்ரஸ் பிரதமராக பதவியேற்றதால் இரு நாடுகள் உறவில் பெரிதாக எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதே பிரான்ஸ் தரப்பு கருத்தாகக் காணப்படுகிறது!