பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் உயிரிழப்பதைத் தடுக்க பிரான்ஸ் முன்வைத்துள்ள ஆலோசனை
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முற்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க பிரான்ஸ் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது.
அதன்படி, சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், மக்கள் தங்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு படகுகளில் பயணிப்பதைத் தடுக்கவேண்டுமானால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்டப்படி ஒரு பாதையை பிரித்தானியா ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin கூறும்போது, பிரித்தானியா சட்டப்பூர்வமான ஒரு புலம்பெயர்தல் பாதையை உருவாக்கவேண்டும், தற்போது புகலிடம் கோர விரும்பும் யாரென்றாலும் அவர்களுக்கு ஆங்கிலக்கால்வாயைக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
ஏற்கனவே, பிரான்ஸ் தரப்பு அலுவலர்கள், பிரான்ஸ் பகுதியில் முகாமிட்டிருக்கும் புலம்பெயர்வோரின் புகலிடக்கோரிக்கைகளை, வடக்கு பிரான்சில் வைத்து பரிசீலிக்குமாறு பிரித்தானிய புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு பரிந்துரைத்துள்ளார்கள்.
சமீபத்தில் சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் 27 புலம்பெயர்வோர் தண்ணிரில் மூழ்கி உயிரிழந்ததை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில்தான், புலம்பெயர்வோர் அவ்வாறு அபாயகரமான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பதைத் தடுக்க, பிரான்ஸ் இப்படி ஒரு யோசனையை தெரிவித்துள்ளது.