'இதை ஒழித்தே ஆகவேண்டும்' பிரான்சில் 6-வது வாரமாக மக்கள் ஆர்ப்பாட்டம்!
பிரான்சில் அரசின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரொன் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
தடுப்பூசி கடவுச்சீட்டு, பொது போக்குவரத்து, பொது இடங்களில் தடை என, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பிரான்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து 6-வது வாரமாக நடைபெற்றுவருகிறது.
மேலும், கோடை விடுமுறை முடிந்து மக்கள் நாடு திரும்பிவரும் நிலையில், அடுத்த வாரம் இன்னும் கூடுதலாக பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.