புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் கடத்தும் அந்த பொருள்: பிரித்தானிய உளவுத்துறையை எச்சரித்த பிரான்ஸ்
ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர், தங்களுடன் ஆயுதங்களை கடத்திச் செல்வது குறித்து பிரித்தானிய உளவுத்துறையை பிரான்ஸ் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை எக்கச்சக்கமான புலம்பெயர்வோர் வடக்கு பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முற்பட்ட நிலையில், அவர்கள் தாங்கள் பயணிக்கும் படகுகளில் துப்பாக்கிகளைக் கடத்தி வருவதாக பிரித்தானிய உளவுத்துறையை பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
உடனே பிரித்தானிய தேசிய குற்றவியல் ஏஜன்சி, எல்லை பாதுகாப்புப் படைக்கும், பிரித்தானிய கடலோர பாதுகாப்புப்படைக்கும் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி படகுகளை கண்காணிக்கச் சென்ற கடலோரக் காவல் படையினரின் ஹெலிகொப்டர் ஒன்று முன்னெச்சரிக்கையாக குறிப்பிட்ட படகு ஒன்றை இரண்டு மைல் தூரத்திலிருந்தவண்ணமே கண்காணித்துள்ளது. மீட்புப் படகுகளும் சந்தேகத்துக்குரிய அந்த படகிலிருந்து தள்ளி நிற்குமாறு உத்தரவிடப்பட்டது.
அந்த குறிப்பிட்ட, படகில் வழக்கத்துக்கு மாறான ஒரு விடயத்தை மீட்புப் படையினர் கவனித்துள்ளனர். அந்த படகில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த ஒரு பெண்ணும் 13 ஆண்களும் மீட்புக் குழுவினர் அவர்களை நெருங்க முயன்றபோது குனிந்து தங்கள் முகத்தை மறைத்துக்கொள்ள முயன்றிருக்கின்றனர். அத்துடன், அந்த படகிலிருந்த தார்ப்பாய்க்குக் கீழே அவர்கள் எதையோ மறைத்து வைப்பதை மீட்புப் படகிலிருப்பவர்கள் கவனித்துள்ளனர்.
ஆனால், அந்த படகில் ஆயுதங்கள் கிடைத்ததா என்பது குறித்து கருத்து தெரிவிக்க உளவுத்துறை மறுத்துவிட்டது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இவ்வளவு நாட்களும் பிரான்சிலிருந்து புலம்பெயர்வோரை பிரான்ஸ் நாட்டுப் படகுகள் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானிய கடல் எல்லைக்குள் கொண்டு வந்து விட்ட சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், தாங்கள் கண்காணித்தபோது படகுகளில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதும், அது குறித்து பிரித்தானிய உளவுத்துறையை பிரான்ஸ் பாதுகாப்புப் படைகள் எச்சரித்ததுதான் ஆச்சரியம்!