கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தவர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி
கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைப் போலவே, அவர்களை ஏமாற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பெருந்தொற்று காலகட்டத்தையும் மீறி, 2021ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 405,000.
ஆக, இப்படி மக்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்துகொண்டே இருக்க, புதிதாக புலம்பெயர்ந்து வருவோரைக் குறிவைத்து மோசடி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கனடாவில் அரசோ அல்லது தனியாரோ எப்படி ஆட்களை வேலைக்கு எடுப்பார்கள் என்பது போன்ற விடயங்கள் குறித்து சரிவரத் தெரியாததால் புதிதாக கனடாவுக்கு வருவோர் இந்த மோசடியாளர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்.
நீங்கள் புதிதாக கனடாவுக்கு புலம்பெயர்ந்தவராகவோ அல்லது, புலம்பெயரும் திட்டத்தில் இருப்பவராகவோ இருந்தால், உங்களுக்காக சில ஆலோசனைகள்.
முதலில், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC), கீழ்க்கண்டவற்றையெல்லாம் செய்யாது என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்...
IRCC அமைப்பு, உங்களை அழைத்து கட்டணம் அல்லது அபராதம் செலுத்தச் சொல்லாது.
கைது செய்வதாகவோ அல்லது நாடுகடத்தப் போவதாகவோ மிரட்டவோ, அச்சுறுத்தவோ செய்யாது.
உங்கள் குடும்ப உறுப்பினருக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்துக்களுக்கோ சேதம் விளைவிப்போம் என மிரட்டாது.
உங்களைக் குறித்த தனிப்பட்ட தகவல்களை (நீங்கள் ஏற்கவனே அளித்துள்ள தகவல்களை உறுதி செய்து கொள்வதைத் தவிர்த்து) தொலைபேசியில் அழைத்துக் கேட்காது.
உங்கள் நிதி தொடர்பான விடயங்களை தொலைபேசியில் அழைத்துக் கேட்காது.
உடனடியாக கட்டணம் செலுத்தவேண்டும் என அவசரப்படுத்தாது.
கிரெடிட் கார்டுகள், வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தக் கோராது.
கட்டணம் செலுத்தாததற்காக உங்களைக் கைது செய்ய பொலிசாரை அனுப்பாது.
நீங்கள் கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்திருக்கும் பட்சத்தில், எப்படியெல்லாம் உங்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள் என்பது குறித்து சில தகவல்களைத் தருகிறோம்...
1. அரசு அதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் நபர்கள்: அரசு ஊழியர் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒருவர், தொலைபேசி வாயிலாக, நீங்கள் ஆவணங்களை தவறாக நிரப்பியிருக்கிறீர்கள் என்பது போன்ற விடயங்களைக் கூறி, நீங்கள் கூடுதல் கட்டணம் அல்லது பராதம் செலுத்தவேண்டும் என்று கூறி உங்களை அச்சுறுத்தலாம்.
அப்படிப்பட்டவர்கள், உடனடியாக நீங்கள் கட்டணம் அல்லது அபராதம் செலுத்தாவிட்டால், உங்கள் புலம்பெயர்தல் நிலையை நீங்கள் இழந்துவிடுவீர்கள் என்றோ அல்லது நீங்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்றோ மிரட்டலாம். சிலர் உங்கள் குடும்பத்தினருக்கு கூட மிரட்டல் விடுக்கலாம்.
2. போலி மின்னஞ்சல்கள்: உங்கள் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய பாஸ்வேர்டு போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்டோ அல்லது பணம் முதலீடு செய்ய உங்களை சம்மதிக்க வைக்கும் வகையிலோ மின்னஞ்சல்கள் வரக்கூடும்.
3. போலி கணினி வைரஸ்: உங்கள் கணினியில் வைரஸ் வந்திருப்பதாகவும், அதை சரி செய்ய பாஸ்வேர்டு போன்ற தகவல்களைக் கொடுக்குமாறும் தொலைபேசி அழைப்பு வரலாம்.
ஆக, கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்வோர், இந்த விடயங்களைக் குறித்து விழிப்புடன் இருந்தால் மோசடிகளைத் தவிர்க்கலாம்.