அரசு பேருந்துகளில் இலவச பயணம், ரூ.10,000 பரிசு - தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
தற்போது பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. இதன்படி தினசரி சுமார் 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
ரூ.10,000 பரிசு
பயணிகள் முன்பதிவு செய்து பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 2024 முதல் முன்பதிவு செய்யும் பயணிகளை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்பவர்களில், மாதம் 3 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது.
அதன்பின்னர் இந்த திட்டம் 13 பேருக்கு என விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, முதல் 3 பேருக்கு தலா ரூ.10,000 மற்றும் அடுத்த 10 பேருக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது. மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்பவர்களும் குலுக்கலில் சேர்க்கப்பட்டனர்.
இலவச பயணம்
தற்போது, கோடை காலத்திற்காக சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
01/04/2025 முதல் 15/06/2025 வரை முன்புதிவு செய்து பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை வழங்கப்பட உள்ளது.
இந்த குலுக்கலில் முதல் பரிசாக 25 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 01/07/2025 முதல் 30/06/2026 வரை 20 முறை இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
2 ஆம் பரிசாக 25 நபர்களுக்கு 10 முறை இலவச பயணமும், 3 ஆம் பரிசாக 25 நபர்களுக்கு 5 முறை இலவச பயணமும் மேற்கொள்ள முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |