பிரான்சில் அரசியலாகும் அமெரிக்க ஊடக பிரபலத்தின் கணவரின் இசை நிகழ்ச்சி
அமெரிக்க ஊடகப் பிரபலம் ஒருவரின் முன்னாள் கணவரும், அமெரிக்க ராப் பாடகருமான ஒருவரின் இசை நிகழ்ச்சி அரசியலாகிவருகிறது.
அமெரிக்க ஊடக பிரபலத்தின் கணவர்
கான்யே வெஸ்ட் (Kanye Omari West, 48) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் உருவாக்கிய மூன்று ஆல்பங்கள் ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றுள்ளன.

இந்த கான்யே, பிரபல அமெரிக்க ஊடக பிரபலமான கிம் கார்டேஷியனின் முன்னாள் கணவர் ஆவார்.
அரசியலாகும் இசை நிகழ்ச்சி
இந்நிலையில், கான்யேவின் இசை நிகழ்ச்சிகள் அரசியலாகிவருகின்றன. அதாவது, கான்யே தொடர்ந்து யூத மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.

அதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த கான்யேவுக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் நடைபெற இருந்த கான்யேவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதம் 11ஆம் திகதி பிரான்சிலுள்ள Marseille நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார் கான்யே.

ஆனால், அவரது நிகழ்ச்சியை தடை செய்ய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Laurent Nunez திட்டமிட்டுவருகிறார். ஆக, பிரான்சிலும் கான்யேவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவது சந்தேகமே என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |