பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தூதர்: மேக்ரான் வெளியிட்டுள்ள தகவல்
நைஜர் நாட்டில், பிரான்ஸ் தூதரும் தூதரக அதிகாரிகளும் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உணவு வழங்கப்படவில்லை
பிரான்ஸ் நாட்டின் Burgundy நகரில், ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதரும், தூதரக அதிகாரிகளும், நைஜர் நாட்டில் ராணுவ அரசால் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தூதரகத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மேக்ரான்.
நைஜர் நாட்டில் என்ன நடக்கிறது?
ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ராணுவம் நைஜர் நாட்டில் முகாமிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நைஜர் தலைநகர் Niameyக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன்பு, ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில், நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது அந்நாட்டு ராணுவம். ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நைஜருக்கான பிரான்ஸ் தூதரான Sylvain Itte, நைஜர் தலைநகரில்தான் இருப்பார், வெளியேறமாட்டார் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில்தான், தற்போது பிரான்ஸ் தூதரும் தூதரக அதிகாரிகளும் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.