மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து இலங்கையர்கள் உட்பட 61 புலம்பெயர்ந்தோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள்
ஆங்கிலக்கால்வாயில் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 61 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பெரிய அலைகளால் மூழ்கத்துவங்கிய படகு
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பயணித்துக்கொண்டிருந்த 61 புலம்பெயர்ந்தோரைக் கொண்ட படகு ஒன்று பெரிய அலைகள் காரணமாக மூழ்கத்துவங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை, அதாவது நவம்பர் மாதம் 29ஆம் திகதி, சிறுபிள்ளைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் படகு ஒன்றில் பயணித்துள்ளனர்.

அப்போது அந்த ரப்பர் படகு மூழ்கத்துவங்க, பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களை மீட்டுள்ளனர். அவர்கள் அந்த இடத்துக்கு வரும்போது, படகிலிருந்த சிலர் ஏற்கனவே தண்ணீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள்.
அவர்களில் சிலர் மீட்புப் படகில் ஏறமுடியாத அளவுக்கு குளிரில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்ததால், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சிலரை அனுப்பி அவர்களை மீட்டுள்ளனர் பிரான்ஸ் அதிகாரிகள்.

இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்கள்
அந்த படகில், இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாட்டு புலம்பெயர்வோர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்கள், ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், அல்பேனியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அந்த படகிலிருந்து மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.


 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        