பிரித்தானிய போர்க்கப்பல்களைக் கண்டு மிரண்டு திரும்பிய பிரான்ஸ் படகுகள்... அடிவாங்கியும் அடங்க மறுத்து மீண்டும் மிரட்டல்
பிரித்தானிய கடல் பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பில் எழுந்த பிரச்சினை, கிட்டத்தட்ட போர் உருவாகிவிடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே மீன் பிடித்தல் தொடர்பில் பிரச்சினைகள் உருவாகின.
தங்கள் கடல் பரப்பில் பிரான்ஸ் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க பிரித்தானியா கட்டுப்பாடுகள் விதித்தது. அவற்றில் ஒன்று, Channel தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றான ஜெர்சி தீவுப் பகுதியில் மீன் பிடிக்க, சிறப்புத் தொழில்நுட்ப வசதி கொண்ட 41 பிரெஞ்சுப் படகுகளுக்கு மட்டும் பிரித்தானியா அனுமதியளித்தது.
அத்துடன், அந்த மீன் பிடிப் படகுகள் எங்கெல்லாம் செல்லலாம், எங்கு செல்லக்கூடாது, கடலில் எத்தனை நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்கலாம், அவர்கள் படகுகளில் என்னென்ன இயந்திரங்கள் வைத்திருக்கலாம் என்பது குறித்தெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த விடயம் பிரான்சை எரிச்சலடையச் செய்யவே, ஜெர்சி தீவுக்கு பிரான்சிலிருந்து கடலுக்கடியில் பதிக்கப்பட்ட கேபிள்கள் மூலம் மின்சாரம் செல்லும் நிலையில், மீன் பிடிப்பதில் பிரச்சினை செய்தால், பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, அந்த மின்சார கேபிள்களை துண்டித்து ஜெர்சி தீவுக்கு மின்சாரம் கிடைக்காமல் செய்துவிடுவோம் என எச்சரித்தார் பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சரான Annick Girardin.
மேலும், ஜெர்சி தீவிலுள்ள துறைமுகம் ஒன்றை, பிரான்சுக்கு சொந்தமான 100 மீன் பிடி படகுகள் சுற்றி வளைக்க இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, பிரித்தானியா, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் கூடிய HMS Severn மறும் HMS Tamar என்னும் போர்க்கப்பல்கள் இரண்டை ஜெர்சி தீவுக்கு அனுப்பியது.
பதிலுக்கு பிரான்ஸ் தன் போர்க்கப்பல்களை அனுப்பியது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், பிரான்ஸ் கப்பல்கள் பிரித்தானிய கப்பல்களின் அளவில் பாதியளவு கூட கிடையாது.
கடைசியில், வம்பு செய்யவந்த அனைவரும் வாலைச் சுருட்டிக்கொண்டு பிரான்சுக்கே திரும்பினர். பின்னர் பிரித்தானிய போர்க்கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டன. புறப்பட்டாலும், சற்று தொலைவில் நின்று பிரான்ஸ் படகுகள் அனைத்தும் தொந்தரவு செய்யாமல் திரும்புகின்றனவா என்பதை அவை உறுதி செய்துகொண்டன.
இந்நிலையில், அவமானப்பட்டும் அடங்காத பிரான்ஸ் மீனவர்கள், தற்போது, கலாயிஸ் (Calais) துறைமுகத்தை முற்றுகையிட இருப்பதாக அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தங்கள் மீன் பிடி படகுகள் அனைத்தையும் ஜெர்சி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்காவிட்டால், பிரித்தானிய பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை அதிகரிக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.