பாஸ்மதி அரிசியில் நச்சுப்பொருள்... திரும்பப் பெறும் பிரெஞ்சு பல்பொருள் அங்காடி
பிரான்ஸ் பல்பொருள் அங்காடி ஒன்று, தனது தயாரிப்பான பாஸ்மதி அரிசியை திரும்பப் பெற்றுவருகிறது.
Carrefour என்னும் அந்த பல்பொருள் அங்காடியின் தயாரிப்பான பாஸ்மதி அரிசியில், Ochratixin A என்னும் நச்சுப்பொருள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே அந்த அரிசி பாக்கெட்களை திரும்பப்பெற்று வருகிறது அந்த பல்பொருள் அங்காடி.
01/07/22 என்ற காலாவதி திகதியும், 3560070837984 என்ற EAN எண்ணும் கொண்ட ஒரு கிலோ பாஸ்மதி அரிசி பாக்கெட்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட பாக்கெட்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அந்த அரிசியை உண்ணவேண்டாம் என்றும், அதை பல்பொருள் அங்காடியிலேயே திருப்பிக் கொடுத்துவிடுமாறும், அதற்கான தொகை திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் Carrefour கேட்டுக்கொண்டுள்ளது.
Ochratixin என்பது பூஞ்சைக்காளான் ஒன்றால் தயாரிக்கப்படும் நச்சுப்பொருள் ஆகும்.
அது சாதாரணமாகவே பல தானியங்கள், காபி, கொக்கோ மற்றும் உலர் பழங்களில் காணப்படுவதுண்டு.
Ochratixin அதிக அளவில் கலந்திருக்கும் உணவுப்பொருட்களை உண்ணுவது உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.