நெருக்கடியில் பிரான்ஸ் சினிமா: கோவிடுக்குக்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரான்ஸ் சினிமாவின் நிலைமை கோவிடுக்குப் பின் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் பிரான்ஸ் திரைத்துறையினர்.
திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாம்.
உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை கொடுத்துள்ள பிரான்ஸ் சினிமாவின் நிலைமை கோவிடுக்குப் பின் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் பிரான்ஸ் திரைத்துறையினர்.
குறிப்பாக, திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதாம்.
அதற்கு முக்கிய காரணம் கோவிட். கோவிட் காலகட்டத்தில் சமூக இடவெளி முதலான கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டதால் திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இப்போது கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டுவிட்டாலும், முன்போல் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லையாம். முதியவர்களைப் பொருத்தவரை தொற்று அபாயம் கருதி வீடுகளில் திரைப்படம் பார்க்கத் துவங்கியவர்கள், அதையே இப்போதும் தொடர்கிறார்கள்.
கோவிட் காலகட்டத்தில் இன்னொரு விடயமும் நிகழ்ந்தது. சினிமாவை வீட்டுக்கே, இணையம் வாயிலாக உங்கள் கணினி மற்றும் மொபைலுக்கே கொண்டு சேர்க்கும் நிறுவனங்களால் திரையரங்குகள் பெரிய அளவில் இழப்பைக் கண்டுள்ளன.
வீட்டில் உட்கார்ந்து வசதியாக சினிமா பார்த்த பலர் அதையே தொடர விரும்புவதால், திரையரங்குகளில் இருக்கைகள் காலியாக உள்ளன. திரையரங்கம் சார்ந்த சிற்றுண்டி போன்ற விடயங்கள் விற்பனையும் அடிவாங்கியுள்ளது.
விலைவாசி உயர்வால் டிக்கெட் வாங்கி திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்க தயக்கம் காட்டும் மக்கள், மின்கட்டண உயர்வால் பாதிப்புக்குள்ளாகியுள்ள திரையரங்கு உரிமையாளர்கள், மக்களை மீண்டும் கவர்ந்திழுப்பதற்காக சினிமா திரைகளை புதுப்பிக்கவேண்டியுள்ளதால் ஆகும் செலவு என பல்வேறு பிரச்சினைகளால் தடுமாறி வருகிறது பிரான்ஸ் திரைப்படத்துறை.
இந்நிலையில், பிரான்ஸ் திரைப்படத் துறையினர் இந்த மாதம் கூடி தங்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.