மின்சாரத்தை சேமிப்பதற்காக பிரெஞ்சு நகரங்கள் பல செய்துள்ள முன்மாதிரியான செயல்...
பிரான்சிலுள்ள சில நகரங்கள் தாமாகவே மின்சாரத்தை சேமிப்பதற்கான முயற்சிகளைத் துவங்கியுள்ளன.
தேவையற்ற இடங்கள் மற்றும் தேவையற்ற நேரங்களில், விளக்குகளை அணைத்து வைத்தல் முதல், சென்சார்கள் பொருத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்துவது வரை பல நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பா ஆற்றல் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், பல பிரெஞ்சு நகரங்கள் மின்சாரத்தை சேமிப்பதற்கான முன்மாதிரியான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன.
Lyon நகரம் மின்விளக்குத் திருவிழாவுக்கு பெயர் பெற்றது. அந்நகர அதிகாரிகள், தங்கள் நகரிலுள்ள கட்டிடங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்கான சில நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்கள்.
அதாவது, நகரின் பாலங்கள், தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் முதலான கட்டிடங்களிலுள்ள அலங்கார விளக்குகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு அணைத்துவிடுகிறார்கள்.
விளக்குகள், மக்கள் நடக்க, பாதை தெரிய, என அத்தியாவசியத்துக்குத்தான், வெறும் அலங்காரத்துக்கு அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள் என்கிறார் நகர துணை மேயரான Sylvain Godinot.
சில கடைகளில் இரவெல்லாம் விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே, பாரீஸ் போன்ற நகரங்களில் பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் தேவையற்ற விளக்குகளை அணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
அதே நேரத்தில், Lyon நகரத்திலுள்ள கடைகளோ மற்றவர்களுக்கு முன்மாதிரியாக பல நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளன.
LED விளக்குகளை பயன்படுத்துதல், மற்றும் கடைகளில் பகல் நேர வெளிச்சம் இருக்கும்போது அதை உணர்ந்து தானாக விளக்குகள் அணையும் வகையிலான சென்சார்களை இணைப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளார்கள்.
LED பல்புகள் குறைவான மின்சாரத்தையே செலவிடும். இந்த சென்சார்களோ, வெளியே வெளிச்சம் இருக்கும்போது விளக்குகளை தானாக அணையச் செய்துவிடும்.
இப்படி Lyon நகர மக்கள் மின்சாரத்தை மிச்சப்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.