பிரான்சில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோக்கள்... கொலை மிரட்டல் விடுத்தவர்களுக்கு தண்டனை
பிரான்சில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோக்களைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்தன.
Mila (18) என்ற அந்த இளம்பெண், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவருக்கு 16 வயது இருக்கும்போதிலிருந்தே இஸ்லாம் மற்றும் குரான் குறித்து மோசமாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டுவந்தார்.
அவர் பேச்சுரிமை மற்றும் மதங்களை தூஷிக்கும் ஒரு அடையாள பெண்ணாக கருதப்பட்டு, ஏராளமானோர் அவரை பின்தொடரவும் செய்தனர்.
அதே நேரத்தில், Milaவுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனால் அவர் பல பள்ளிகள் மாற நேர்ந்ததுடன், எப்போதும் பொலிசாருடன் பாதுகாப்புடனேயே நடமாடவேண்டிவந்தது.
Milaவுக்கு கொலை மற்றும் வன்புணர்வு மிரட்டல்கள், அவரது பாலியல் நாட்டம் குறித்து வெறுப்பு செய்திகள் 100,000க்கு மேல் வந்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அப்படி இணையம் வாயிலாக Milaவுக்கு மிரட்டல் விடுத்தவர்களில் 13 பேர் சிக்கியுள்ளார்கள். அவர்கள் பல்வேறு மதப் பின்னணி கொண்டவர்கள்.
இந்த வழக்கு நீதிமன்றம் வந்த நிலையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, சமூக ஊடகங்கள் என்பவையும் நமது தெருக்கள் போலத்தான், ஒருவர் தெருவில் நடந்து செல்லும்போது எப்படி அவரை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ, கேலி செய்யவோ கூடாதோ, அதேபோல, சமூக ஊடகங்களிலும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ஆளுக்கு 1,770 டொலர்கள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
ஆனால், அவர்கள் உடனே சிறைக்கு செல்லவேண்டியதில்லை, மேலும் ஏதாவது குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் சிறை செல்லவேண்டியிருக்கும்.