ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டவருக்கு சிறைத்தண்டனை: பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்ட ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரான்ஸ் மீட்புக்குழுவினர் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையின்போது, ஆப்கன் நாட்டவர் ஒருவர் மீட்புப்பணியில் பெரிதும் உதவியாக இருந்துள்ளார். ஆகவே, அவரையும் தங்களுடன் பிரான்சுக்கு அழைத்துவந்துள்ளனர் பிரான்ஸ் மீட்புக் குழுவினர். ஆனால், அவர் தாலிபான்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவரும் அவருக்கு நெருக்கமான நான்குபேரும் உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர்.
அந்த நான்கு பேரில் ஒருவரான Ahmat M என்பவருக்குதான் தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Ahmat, பாரீஸ் புறநகர்ப்பகுதியான Noisy-le-Grandஇல் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருக்கிறார். கண்காணிப்பு விதிகளின்படி யாரும் குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது. அதன்படி, Ahmat, தான் தங்கியிருக்கும் Noisy-le-Grandஐ விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்த விதியை மீறி வெளியே சென்றுள்ளார்.
பிரான்சுக்கு வந்ததிலிருந்து தனக்கு தலைவலி மற்றும் வாந்தி இருப்பதாக தெரிவித்த Ahmat, தனக்கு மாத்திரை வாங்கித் தருவதாக தன்னுடன் ஹொட்டலில் தங்கியிருக்கும் ஒருவர் கூறியதாகவும், அவரைப் பின்தொடர்ந்து தான் சென்றதாகவும், மத்திய பாரீசுக்கு தான் சென்றதை அறியாமலே தான் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
ஆனால், அவருடன் சென்றவரோ, சிம்கார்டு வாங்குவற்காக தன்னுடன் வருமாறு Ahmat தன்னை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரிக்கும்போது, Ahmat தனக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதே தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, கண்காணிப்பு விதிகளை மீறிய Ahmatக்கு பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.