பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக தலைமை அதிகாரி திடீர் பணி நீக்கம்: நீடிக்கும் மர்மம்
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கு பொறுப்பான வெளியுறவு அமைச்சக பிரிவின் தலைவர் திடீரென மாற்றப்பட்டுள்ள விடயம் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்த Christophe Farnaud திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Anne Gueguen என்னும் தூதரக அதிகாரி அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
எதனால் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென Farnaud மாற்றப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த முடிவின் பின்னணியிலிருப்பது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான என பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் தூதரக அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
மேக்ரானுக்கும் வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையிலான உறவில் உரசல் இருந்துகொண்டே வந்துள்ளது. தனது நோக்கத்தை நிறைவேற்றத் தவறக்கூடாது என அவர் தூதரக அதிகாரிகளை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், Farnaud மேக்ரானின் நோக்கத்தை அமுல்படுத்த தயங்கியதாக பல அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அவர் திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்க Farnaud உட்பட யாரும் முன்வரவில்லை.
அடுத்த ஏப்ரலில் ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் மேக்ரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்களை எவ்விதம் தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் என்கிறார்கள் சிலர்.
வேறு சிலரோ, Farnaudஇன் நிர்வாக ஸ்டைலுக்கும் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் அவரது நிர்வாக ஸ்டைல் குறித்து பலர் புகாரளித்துள்ளார்கள். சிலர் அதை மறுக்கிறார்கள்.
ஆக, திடீரென Farnaud மாற்றப்பட்ட விடயம் மர்மமாகவே நீடிக்கிறது.