மீண்டும் விசாரணையை எதிர்கொள்ளும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும்
French ex-President Sarkozy and wife Carla Bruni to face trial: பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான சார்க்கோஸியும் அவரது மனைவியும் மீண்டும் வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.
ஊழல் வழக்கு...
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக, லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.

அந்த வழக்கில், சார்க்கோஸி மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்த நீதிமன்றம் ஒன்று, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 யூரோக்கள் அபராதமும் விதித்தது.
அதைத் தொடர்ந்து, பாரீஸில் அமைந்துள்ள Prison de la Sante என்னும் சிறையில் அடைக்கப்பட்ட சார்க்கோஸி, இருபதே நாட்களில் வீடு திரும்பிவிட்டார்.
மீண்டும் வழக்கு விசாரணை
இந்நிலையில், சார்க்கோஸியும் அவரது மனைவியான கார்லா ப்ரூனியும் மீண்டும் வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
கடாஃபியிடம் பணம் பெற்ற வழக்கு தொடர்பில், சார்க்கோஸியைக் குற்றவாளியாக்கக்கூடிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்த ஒரு முக்கிய சாட்சியின் வாக்குமூலம் திரும்பப் பெறப்பட்டதை மையமாகக் கொண்டே இந்த புதிய வழக்கு விசாரணை துவங்க உள்ளது.

பிரெஞ்சு லெபனான் ஊடகவியலாளரான ஸையத் டக்கிடின் என்பவர், சார்க்கோஸி 2007ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியான பின்பும் கடாஃபியிடம் தொடர்ந்து பல மில்லியன் யூரோக்கள் பணம் பெற்றதாகவும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சாட்சியமளிப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டார் டக்கிடின்.
பின்னர் அவர் மரணமடைந்துவிட்டார். இந்நிலையில், டக்கிடின் சாட்சியமளிப்பதிலிருந்து பின்வாங்கியதன் பின்னணியில் சார்க்கோஸியும் அவரது மனைவியும், Michèle "Mimi" Marchand என்னும் ஊடக பிரபலமும் இருப்பதாக நீதித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
அந்த விடயம் தொடர்பில்தான் சார்க்கோஸியும் அவரது மனைவியும் அந்த ஊடக பிரபலமும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தம்பதியருக்கு 10 ஆண்டுகள் சிறையும் 150,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம்!