பிரித்தானிய லொறிகளையும் படகுகளையும் திடீரென தடுத்து நிறுத்திய பிரான்ஸ் மீனவர்களால் பரபரப்பு
பிரித்தானியாவுக்கு பொருட்கள் கொண்டு வரும் லொறிகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் நாட்டு மீனவர்கள், பிரித்தானிய படகுகளையும் சுற்றிவளைத்துக்கொண்டதால் சுமார் இரண்டு மணி நேரம் வரை பரபரப்பு நிலவியது.
பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரித்தானியா உரிமம் வழங்குவது தொடர்பான பிரச்சினை மீண்டும் தலையெடுக்கத் துவங்கியுள்ளது.
நேற்று, பிரான்சிலுள்ள Calais துறைமுகப்பகுதியில் திடீரென ஆறு பிரெஞ்சு மீன் பிடி படகுகள் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்லும் படகுகளை புறப்படவிடாமல் தடுத்ததையடுத்து, படகு சேவைகள் ரத்து செய்யப்படன.
மேலும், பிரித்தானியாவுக்குச் சொந்தமான Normandy Trader என்னும் சரக்குக்கப்பலை, Saint-Malo என்ற துறைமுகப்பகுதியில் பிரான்ஸ் நாட்டு மீன்பிடி படகுகள் சுற்றி வளைத்து நகர விடாமல் தடுத்தன.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பிரெஞ்சு பொலிசாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, பிரெஞ்சு மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்தினர்.
மேலும், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் சேனல் சுரங்கப்பாதையின் பிரெஞ்சுப் பகுதியில், அதாவது Calais பகுதியில் திடீரென கூடிய பிரான்ஸ் மீனவர்கள் சிலர், ஏராளமான கார்களையும் வேன்களையும் சாலையில் குறுக்கே நிறுத்தி, புகை வெளியிடும் canisterகளையும், எரியும் மரக்கட்டைகளையும் சாலையில் போட்டு, போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த நிகழ்வுகளை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
இதற்கிடையில், இந்த நடவடிக்கைகள் வெறும் எச்சரிக்கைக்காகத்தான் என்று கூறியுள்ள பிரான்ஸ் மீனவர் கமிட்டி தலைவரான Olivier Lepretre, பிரித்தானியர்கள் ஐரோப்பிய சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால், நாங்கள் பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்கக்கூடாதாம். இது சரியில்லை. பிரித்தானிய அரசு ஒப்பந்தத்தை மதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.