கிறிஸ்துமஸ் பண்டிகையை கெடுத்துவிடுவோம்... பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் பிரித்தானியாவுக்குள் செல்லாதபடி தடுத்துவிடுவோம் என பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய மீன் பிடி உரிமம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், ஐரோப்பாவையும் பிரித்தானியாவையில் இணைக்கும் ஒரே வழியான Channel சுரங்க வழியையும், கலாயிஸ் துறைமுகத்தையும் அடைக்கப்போவதாக பிரான்ஸ் நாட்டு மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஜெர்ஸி தீவுப்பகுதியில் மீன் பிடிக்க அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் அளித்திருந்த 47 விண்ணப்பங்களில் 12 விண்ணப்பங்களை மட்டுமே பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளதால் பிரான்ஸ் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை தோல்வி அடையுமானால், பிரித்தானியாவுக்குச் செல்லும் அனைத்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தயாரிப்புகளையும் தடுத்து நிறுத்திவிடுவோம் என்று கூறியுள்ளார் வடக்கு பிரான்ஸ் மீனவர்கள் ஆணையத்தின் தலைவரான Olivier Lepretre என்பவர்.
போரிஸ் ஜான்சன் தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லையென்றால், பிரித்தானியர்களுக்கு கிறிஸ்துமஸ் நேரத்தில் பல அருமையான உணவுப்பொருட்கள் கிடைக்காது. அப்படி ஒரு நிலை வராது என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.