மாலியில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட பெண்... இரகசியமாக செய்த செயலால் அதிகாரிகள் கோபம்
மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை, உயிரைப் பணயம் வைத்து இராணுவ வீரர்கள் மீட்டு பிரான்ஸ் கொண்டுவந்த நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் மாலிக்கே திரும்பியுள்ளதால் பிரான்ஸ் அதிகாரிகள் கோபமடைந்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டவரான Sophie Pétronin (76) மாலி நாட்டில் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.
2016ஆம் ஆண்டு, அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றார்கள்.
2020ஆம் ஆண்டு அவரை பிரான்ஸ் மீட்டுக்கொண்டுவந்தது. அவர் விடுவிக்கப்பட்டபின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்தார். ஆனால், அவர் சுவிட்சர்லாந்தில் மகிழ்ச்சியாக இல்லை என கூறப்படுகிறது.
தான் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மாலிக்குத் திரும்பவே அவர் எப்போதும் விரும்பியிருக்கிறார். அத்துடன், அவர் தத்தெடுத்த மகளும் மாலியில் இருப்பதால், அவர் தன் மகளுடன் வாழவே விரும்பியிருக்கிறார்.
இந்நிலையில், Sophie மீண்டும் இரகசியமாக மாலிக்குத் திரும்பி விட்டதாக தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனால் பிரான்ஸ் அரசு கோபமடைந்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளரான Gabriel Attal, Sophieயின் முடிவு பொறுப்பற்ற ஒரு செயல் என கண்டித்துள்ளார். அவர் தன் சுய பாதுகாப்புக்கும், பிரான்ஸ் இராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாக Gabriel தெரிவித்துள்ளார்.
நம் குடிமக்கள் பிணைக்கைதிகளாக வெளிநாடுகளில் பிடித்துவைக்கப்படும்போது, நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்களை மீட்கிறார்கள்.
அப்படி மீட்கும் நடவடிக்கைகளின்போது, நம் வீரர்களில் சிலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு நாம் கூடுதல் மரியாதை செலுத்தவேண்டும் என்றார் அவர்.