பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு எதிராக முதன்முறையாக பிரான்ஸ் நடவடிக்கை
எக்கச்சக்கமான பணத்தைக் அள்ளிக்கொடுத்து, எப்படியாவது பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைபவர்களை தடுத்துவிடுங்கள் என பிரித்தானிய உள்துறைச் செயலர் சொல்லி சொல்லி அலுத்துப்போய், ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் தன் கோபத்தைத் திருப்பியுள்ள நிலையில், முதன்முறையாக வாங்கிய பணத்துக்கு வேலை செய்துள்ளது பிரான்ஸ்.
ஆம், ஆங்கிலக்கால்வாய்க்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் படகு ஒன்றை, பிரெஞ்சு போர்க்கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதிலிருந்த புலம்பெயர்வோரை மீண்டும் பிரான்சுக்கே அழைத்துக்கொண்டு சென்றுள்ளது.
அந்த போர்க்கப்பலிலிருந்து புலம்பெயர்வோர் கலாயிஸ் துறைமுகத்தில் இறக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிறு படகு ஒன்றில் பிரித்தானியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 30 புலம்பெயர்வோரை நேற்று காலை மடக்கிய Flamand என்ற பிரெஞ்சு போர்க்கப்பல், அவர்களை ஏற்றிக்கொண்டு கலாயிஸ் துறை முகத்துக்குத் திரும்பியுள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால் ஏமாற்றமடைந்த அந்த புலம்பெயர்வோர் பிரான்ஸ் மண்ணில் மீண்டும் கால் வைத்ததும், அங்கு தயாராக காத்திருந்த பொலிசார் அவர்களை புலம்பெயர்வோர் மையம் ஒன்றிற்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.
இப்படி பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோரை பிரெஞ்சு அதிகாரிகள் வெளிப்படையாக தடுத்து நிறுத்தி திரும்ப பிரான்சுகு அழைத்துச் செல்லும் காட்சி வெளியானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.