கடும் வெப்பத்தை சமாளிக்க பிரான்ஸ் நாட்டவர்கள் செய்யும் வித்தியாசமான விடயம்
பிரான்ஸ் முழுவதும் வரலாறு காணாத அளவிலான வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், வெப்பத்தை சமாளிக்க பிரான்ஸ் நாட்டவர்கள் எளிய வழிமுறை ஒன்றைப் பின்பற்றுகிறார்கள்.
அது, தங்கள் கட்டிடங்களிலுள்ள கண்ணாடி ஜன்னல்களில் சுண்ணாம்பைக் கரைத்து பூசுவதுதான்!
கடும் வெப்பத்தை சமாளிக்க...
பழைய காலத்தில் நெல்லிலிருந்து கிடைக்கும் உமியை எரித்து சாம்பலாக்கி, அந்த உமிக்கரியையும், உப்பையும் பல் விளக்க பயன்படுத்திவந்தார்கள்.

பின்னர் கலர் கலராக, வகை வகையாக டூத் பேஸ்டுகள் அறிமுகமாகின. அத்தனை டூத் பேஸ்டுகளை பயன்படுத்தியும் மக்கள் பல் மருத்துவரிடம் போவது அதிகமானதேயொழிய குறையவில்லை.
இப்போது, உங்கள் டூத் பேஸ்டில் கரி இருக்கிறதா, உப்பு இருக்கிறதா என கேட்கும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, இதைத்தானேடா நாங்கள் முன்பு செய்துகொண்டிருந்தோம் என எண்ணத் தோன்றுகிறது!
அதேபோல, முன்பெல்லாம் கட்டிடங்களின் வெளிப்புறத்தில் வெள்ளை நிறம்தான் அடிப்பார்கள். இன்னும் தெளிவாகக் கூறினால், சுண்ணாம்புதான் அடிப்பார்கள்.
சுண்ணாம்பு கிருமிகளைக் கொல்வதுடன், வெயிலை பிரதிபலிப்பதால் கட்டிடங்களுக்குள் வெப்பநிலை குறைவாகும்.
பிறகு பெயிண்ட் கம்பெனிகள் கலர் கலராக பெயிண்ட்களை அறிமுகம் செய்ய, இப்போது கட்டிடங்கள் கலர் கலராக மட்டுமல்ல, சில கட்டிடங்கள் கல்லறை போல சாம்பல் நிறத்திலும் காட்சி அளிப்பதைக் காணலாம்.
விளைவு? கட்டிடங்களுக்குள் வெப்ப நிலை அதிகரிக்க, வெப்பத்தைக் குறைக்க ஏசி தேவைப்பட, கட்டிடத்துக்குள் குளிர்ச்சியையும், கட்டிடத்துக்கு வெளியே வெப்பத்தையும் ஏசி வெளியிட, உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆக, நம் ஊர்களில் பழைய காலத்தில் செய்துவந்த அதே விடயத்தைத்தான் இப்போது பிரான்சிலும் செய்யத் துவங்கியுள்ளார்கள்.
கட்டிடங்களின் கண்ணாடிகளில் சுண்ணாம்பைக் கரைத்து பூசி, அதன் மூலம் கட்டிடங்களுக்குள் வெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் பிரான்சில் அதிகரித்துவருகின்றன.
இப்படி கண்ணாடிகளிலும் கட்டிடங்களின் வெளிப்புற சுவர்களிலும் வெள்ளை நிறம் பூசுவதால், கட்டிடத்துக்குள் 1.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதைவிட, கட்டிடங்களின் வெளிப்புற சுவர்களில் ஒரு பூச்சு கருப்பு நிற பெயிண்ட் அடித்து, அதன் மீது ஒரு பூச்சு வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதால், வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸ் வரை குறைவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல், பெயிண்டை ஒப்பிடும்போது, சுண்ணாம்பின் விலை மிகவும் குறைவு என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |