பாதிரியார் ஒருவரால்... பிரெஞ்சு பிரதமரின் மகள் வெளிப்படுத்திய பகீர் சம்பவம்
ரோமன் கத்தோலிக்க பள்ளியில் துஷ்பிரயோகத்திற்கு இலக்கான சிறார்களில் தானும் ஒருத்தி என்று தனது மூத்த மகள் வெளிப்படுத்தியது, ஒரு தந்தையாக தனது இதயத்தைப் பிளந்தது என்று பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ தெரிவித்துள்ளார்.
பாதிரியார் ஒருவரால்
தற்போது 53 வயதாகும் Hélène Perlant தமக்கு 14 வயதிருக்கும் போது பாதிரியார் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்வி அமைச்சராகவும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பேய்ரூ இருந்தமையால், தற்போதைய இந்த விவகாரம் அவர் மீது கூடுதல் கவனத்தைத் திருப்பியுள்ளது.
73 வயதாகும் பேய்ரூ இந்த விவகாரம் தொடர்பில் தாம் ஏற்கனவே அறிந்திருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 1950 காலகட்டம் தொடங்கி 2010 வரையில் பலர் பாதிரியார்களால் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ அடுத்த மாதம் நாடாளுமன்ற விசாரணைக்கு ஆஜராக உள்ளார். சம்பவம் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பள்ளியில் தமது மூன்று பிள்ளைகளை அவர் அனுப்பியிருந்தார்.
அந்த மூவரில் Hélène Perlant என்பவரும் ஒருவர். இருப்பினும், 1980களில் நடந்த இந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்துள்ளார்.
ஒரு 30 வருடங்களாக அமைதியாக இருந்தேன். இதைத் தவிர, நான் யாரிடமும் இதைப் பற்றிச் சொன்னதில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பாதிரியார் என் தலைமுடியைப் பிடித்து, தரையில் பல மீற்றர் தூரம் இழுத்துச் சென்று, பின்னர் என்னை முழுவதுமாக அடித்து உதைத்தார், குறிப்பாக வயிற்றில் என அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
200 புகார்கள் பதிவு
அந்த பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது உளவியல் அழுத்தத்தை செலுத்துவதால், அவர்கள் அமைதியாக இருந்தனர் என்றே Hélène Perlant குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த Bétharram பள்ளியானது கடந்த 2009ல் Le Beau Rameau என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1980 முதல் 2010 வரை பேய்ரூ நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தொகுதியில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.
குறித்த பள்ளி தொடர்பில் 1990களில் பாதிரியார்கள் மற்றும் ஊழியர்களால் செய்யப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. ஆனால் 1996ல் பிரெஞ்சு கல்வி அமைச்சகம் நடத்திய விசாரணையில், Bétharram பள்ளியில் மாணவர்கள் கொடூரமாக நடத்தப்படும் சூழல் இல்ல என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர், 10 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர் எந்த வழக்கையும் எதிர்கொள்ளாமல் விடுவிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட ஒருவர் 2023ல் பேஸ்புக் பக்கத்தில் ஒரு குழுவினை உருவாக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்காக முறையிட, இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களால் 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட பாதி குற்றச்சாட்டுகள் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது, இதில் இரண்டு பாதிரியார்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதும் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |