அவசரமாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி: என்ன அறிவிப்புகள் வெளியாக உள்ளன?
கொரோனாவை எதிர்கொள்வதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில், இன்று (17.12.2021), வெள்ளிக்கிழமை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், அமைச்சர்களும், அறிவியல் ஆலோசகர்களும் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தை அடுத்த வாரம்தான் நடத்துவதாக இருந்தது. ஆனால், அவசரமாக முடிவுகள் எடுக்கவேண்டும் என கருத்துக்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இன்று மதியம் அந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த வாரத் துவக்கத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran, கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் சுமார் 4,000 பேர் வரை பிரான்ஸ் நாட்டு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, அரசின் செய்தித்தொடர்பாளரான Gabriel Attalம், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எச்சரித்திருந்தார்.
நேற்று பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பயண விதிகள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்றோ, கூடுதல் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் என்னென்ன கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்...
கூடுதல் பயணக்கட்டுப்பாடுகள்
நேற்று வியாழக்கிழமையன்று, பிரித்தானியாவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் கூட பிரான்ஸ் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுகிறது.
ஆகவே, பிரான்சில் அந்த தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக, அந்த நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
பூஸ்டர் டோஸ் வேகப்படுத்துதல்
பிரான்ஸ் அரசு தடுப்பூசி வழங்குவதை, குறிப்பாக, பூஸ்டர் டோஸ் வழங்குவதை வேகப்படுத்த முயன்று வருகிறது.
நேற்று, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான காத்திருக்கும் காலகட்டத்தை ஐந்து மாதத்திலிருந்து நான்கு மாதங்களாக குறைப்பது தொடர்பான திட்டம் குறித்து பேசியிருந்தார் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran.
ஆனால், அவர் மட்டுமே நினைத்தால் அதை சாத்தியமாக்க முடியாது என்பதையும் அவர் அறிவார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தொடர்பில் புதிய விதிமுறைகள்
இந்த வாரத் துவக்கத்தில் அறிவியல் ஆலோசனைக் குழு தெரிவித்திருந்த சில பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ளலாம் என தெரிகிறது.
கிறிஸ்துமஸ் விருந்து போன்ற விடயங்களுக்காக குடும்பங்கள் கூடும்போது, குறைவான எண்ணிக்கையிலானவர்களே கூடவும், எளிதில் நோய் தொற்றும் அபாயத்திலிருப்பவர்கள் பூஸ்டர் டோஸ் பெற்றிருக்கவும், அறைகள் காற்றோட்டமான வகையில் ஒழுங்கு செய்யப்படவும், விருந்துக்காக கூடுவோர், அன்று சுய கொரோனா பரிசோதனைகள், அல்லது முந்தைய தினம் ஆன்டிஜன் கொரோனா பரிசோதனைகள் செய்திருக்கவும் அறிவியல் ஆலோசனைக் குழு பரிந்துரைத்திருந்தது.
நேற்று, சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véranம், வீட்டில் விருந்து சாப்பிட அமர்பவர்கள், தங்களுக்கிடையே போதுமான இடைவெளி விட்டு அமர்வதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கிடையில், கிறிஸ்துமஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் நெறிமுறைகளாகத்தான் இருக்குமேயொழிய, சட்டப்படி அறிமுகப்படுத்தப்படும் விதிகளாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில், மக்கள் பார்ட்டிகள், சமூகக் கூடுகைகள் முதலான மாஸ்க் அணிய இயலாத கூடுகைகளைத் தவிர்க்குமாறு அரசு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.
தற்போது பொது கட்டிடங்களுக்குள் கூடும்போது மாஸ்க் அணிதல் கட்டாயம் என்ற விதி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இந்த வாரத் துவக்கத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran, வெள்ளிகிழமை (இன்றைய) கூட்டத்தில், 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடையில் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
நீண்ட கால உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட, கொரோனா பாதிக்கும் அபாயத்திலிருக்கும் சிறு பிள்ளைகள், இம்மாதம் (டிசம்பர்) 15ஆம் திகதியிலிருந்தே கொரோனா தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவியலாளர்கள் அது குறித்து ஆராய்ச்சிகள் செய்து முடிவெடுக்காத நிலையில், இப்போதைக்கு, 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடையில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கோ கிடையாது
பிரான்ஸ் சுகாதாரத்துறை அலுவலர்கள், கொரோனாவுக்கு எதிராக பொதுமுடக்கம் அறிவித்தல் காட்டுமிராண்டித்தனமானது என ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆக, இப்போதைக்கு பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கோ இருக்காது என்றே கருதப்படுகிறது.