வட அயர்லாந்து குறித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தால் சர்ச்சை... கொந்தளிக்கும் பிரித்தானியா
வட அயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி அல்ல என்ற அர்த்தத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ள ஒரு கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
G7 உச்சி மாநாட்டுக்காக பிரித்தானியாவில் கூடிய தலைவர்கள் சந்திப்புக்களின்போது, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோரும் சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்தார்கள்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை இன்று வரை ஜீரணிக்க இயலாமல், அவ்வப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களில் முக்கியமானவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
மீன் பிடித்தல் தொடர்பில் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உள்ள உரசல் இன்னும் முடிந்ததுபோல் தெரியவில்லை. பிரெஞ்சு மக்களும், ஜனாதிபதியும் பிரித்தானியா மீதான தங்கள் கோபத்தை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அவர்களுடன் ஐரோப்பிய ஒன்றிய தலைமையும் கைகோர்த்துக்கொள்வதுதான் வேடிக்கை! அந்தவகையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
அதாவது, பிரித்தானியாவின் ஒரு பகுதியான வட அயர்லாந்துக்கு பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்படும் குளிரூட்டப்பட்ட இறைச்சி முதலான உணவுப்பொருட்கள் அங்கு சென்று சேருவதை தாமதப்படுத்தும் வகையில் பிரச்சினையை உருவாக்கி வருகிறது ஐரோப்பிய ஒன்றியம்.
G7 உச்சி மாநாட்டின்போது இது குறித்து மேக்ரானிடம் கேள்வி எழுப்பிய ஜான்சன், உங்கள் நீதிமன்றம் ஒன்று Toulouse நகரிலிருந்து பாரீஸுக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுவதைத் தடுத்தால் எப்படி உணர்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மேக்ரான், Toulouseம் பாரீஸும் ஒரே நாட்டின் பகுதிகள் என்று கூற, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் வந்துவிட்டது.
வட அயர்லாந்தும் பிரிட்டனும் ஒரே நாட்டுன் பகுதிகள்தானே என்றார் அவர். ஆக, வட அயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி அல்ல என்பதுபோல் மேக்ரான் கூறிய கருத்தால் பிரித்தானியர்கள் கோபமடைந்துள்ளார்கள். பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Dominic Raab இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, மேக்ரானின் கருத்துக்கள் தாக்குதல் ரீதியிலானவை என்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், பிரித்தானியாவின்
ஒருமைப்பாட்டுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்கவேண்டிய நேரம் இது என்று
கூறியுள்ளார் அவர்.