பிரான்ஸ் தேர்தல்: பதவி விலகல் கடிதத்தை பிரான்ஸ் அதிபரிடம் ஒப்படைத்த கப்ரியல் அட்டல்!
பிரான்ஸில நேற்று வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் இன்று முற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் இமானுவேல் மக்ரோனிடம் கையளித்துள்ளார்.
பதவி விலகிய கப்ரியல் அட்டல்
பிரான்ஸ்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.
577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தவொரு கூட்டணியும் பெரும்பான்மையை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் இன்று முற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை அரசதலைவர் இமானுவேல் மக்ரோனிடம் கையளித்துள்ளார்.
அந்த வகையில் ஜுன் லுக் மிலென்சொன் தலைமையிலான நியூ பொப்புலர் ஃபுரண்ட் என்ற இடதுசாரிக் கூட்டணி 32.6 வீத வாக்குகளுடன் 188 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இம்மானுவேல் மக்ரோனின் மையவாத கட்சி 27.9 வீதமான வாக்குகளுடன் 161 ஆசனங்களையும் மரீன் லு பென்னின் தேசிய பேரணி கட்சி தலைமையிலான கூட்டணி 24.6 வீத வாக்குகளுடன் 142 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளன.
இதனிடையே இடதுசாரி கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட சோசலிச கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான பிரான்சுவா ஹொலண்ட், நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் இடதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |