பற்றி எரியும் பாரீஸ்... மேக்ரானின் புதிய சட்டத்திற்கு பிரான்சில் கடும் எதிர்ப்பு
பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கொரோனா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. பிரான்சில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
அதன்படி, மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது, உணவகங்களுக்கோ, மதுபான விடுதிகளுக்கோ செல்வோருக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் அவசியமாகிறது.
நேற்று, இந்த புதிய விதிகளை எதிர்த்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மருத்துவமனை ஊழியர்களும், உணவக உரிமையாளர்களும், பெற்றோர்களும் பேரணிகளில் ஈடுபட்டனர்.
சுதந்திரம், சுதந்திரம் என முழங்கியபடி பேரணி முன்னோக்கி நகர, அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை எதிர்ப்பாளர்கள் காலால் உதைத்து பொலிசாரை நோக்கி தள்ளிவிட, தலைநகரம் போர்க்களம் போல் ஆனது.
ஏப்ரலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பிரான்ஸ் மக்களை பிரிக்க பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
ஆனால், ஜூலை பாதி வரும்போது, இனி இசை நிகழ்ச்சிகள், விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் ஆகியவற்றிற்கு செல்ல, தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் அல்லது பிசிஆர் முறையில் செய்யப்பட்ட பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை அளித்தால் மட்டுமே அனுமதி என விதிகளை மாற்றினார் அவர்.
அத்துடன், ஆகத்து மாதம் முதல், மேலும் விரிவாக்கம் செய்யப்படும் விதிகளின்படி, உணவகங்களுக்கோ மதுபான விடுதிகளுக்கோ செல்வோர் மற்றும் முதியோர் இல்லங்களிலுள்ள தங்கள் உறவினர்களைக் காணச் செல்வோர், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் என அனைவருக்குமே தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் அல்லது பிசிஆர் முறையில் செய்யப்பட்ட பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் அவசியம் என்ற விதி அறிமுகம் ஆக உள்ளது.
மேலும், செப்டம்பர் 15 முதல் மருத்துவமனை ஊழியர்கள், முதியோர் இல்ல ஊழியர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்கவேண்டும் என்ற விதியும் அறிமுகம் ஆக உள்ளது. அப்படி தடுப்பூசி பெற்றுக்கொள்ள மறுப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் எதிர்த்துத்தான் மக்கள் பேரணிகளில் இறங்க, பேரணிகள் போராட்டமாக வெடித்து, வாகனங்களுக்கு தீவைக்கப்பட, பாரீஸ் பற்றி எரிகிறது.