பிரான்ஸ் இறுதிச்சுற்று தேர்தல்: என்ன நிலவரம்?
பிரான்சில் நாளை தேர்தலின் இரண்டாவது அல்லது இறுதிச்சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
வன்முறை
பிரான்சில், நாளை தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நாடு மோசமான தேர்தல் பிரச்சாரத்தைக் கண்டுள்ளது.
ஆளும் மேக்ரான் அரசின் செய்தித்தொடர்பாளர் உட்பட 51 வேட்பாளர்கள், அல்லது அவர்களுடைய உதவியாளர்கள், அல்லது கட்சி ஆர்வலர்கள் தாக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
மேக்ரானுக்கு வழிவிடும் கட்சிகள்
மேக்ரான் தேர்தல் அறிவித்தது சரியான முடிவல்ல, அது அவருக்கே பாதகமாக அமையக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கணித்ததற்கு ஏற்ப, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சியான National Rally கட்சி, முதல் சுற்றுத் தேர்தலில் முன்னிலை வகிக்கிறது. மேக்ரான் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது சுற்று தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெறுமானால், அது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என பலதரப்பிலுமிருந்து வலுவான குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. ஆகவே, வாக்குகள் பிரிவதைத் தடுப்பதற்காக, பலவேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 217 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் வாங்கிவிட்டார்கள்.
நாளை என்ன நடக்கும்?
பிரித்தானியா உட்பட, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஆளும் கட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். அது பிரித்தானிய தேர்தலில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. 14 அண்டுகளாக ஆண்ட கட்சிக்கு விடைகொடுத்து, தங்களுக்கு மாற்றம் தேவை என முடிவு செய்துள்ளார்கள், பிரித்தானியர்கள்.
பிரான்ஸ் மக்களில் சில தரப்பினருக்கும் ஆளும் கட்சி மீது விருப்பமின்மை காணப்படுகிறது. ஆக, புலம்பெயர்தல் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட National Rally கட்சியை அவர்கள் ஆட்சியில் அமரவைப்பார்களா, அல்லது, மீண்டும் மேக்ரானுக்கு ஒரு வாய்ப்பளிப்பார்களா என்பது நாளை தெரியவரும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |