பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய தடுப்பூசி சட்டத்திற்கு செனட் ஒப்புதல்!
தடுப்பூசி பாஸ் உட்பட கொரோனாவை சமாளிப்பதற்கான பிரான்ஸ் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பிரெஞ்சு செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் கொண்டு வந்த கொரோனா நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிக்கான சட்ட மசோதாவுக்கு செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
வியாழக்கிழமை செனட்டில் மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் 246 பேர் ஆதரவாகவும், 63 எதிராகவும் வாக்களித்தனர் மற்றும் 26 பேர் வாக்களிக்கவில்லை.
செனட் மற்றும் எம்.பி-க்கள் வியாழன் பிற்பகல் பலாஸ் போர்பனில் கூடி, கூட்டு அமர்வில் மசோதாவை இறுதி செய்ய விவாதிப்பார்கள்.
இதில் உடன்பாடு எட்டப்பட்டால், வியாழன் அன்று செனட்டிலும், வெள்ளியன்று சட்டசபையிலும் மசோதா இறுதி வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும்.
இரண்டு அவைகளும் ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், புதிய சுற்று திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்புக்கு மசோதா இரு அவைகளுக்கும் திரும்ப அனுப்பப்படும், இதில் சட்டமன்றம் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
புதிய மசோதாவின் படி, 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் உணவகங்கள் மற்றும் பார்கள், கலாச்சார இடங்கள் நுழைய அல்லது பிராந்திய பொது போக்குவரத்தில் பயணிக்க தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும், தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது.
இதனிடையே புதன்கிழமை, பிரான்ஸில் 3,61,719 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது மற்றும் 246 பேர் உயிரிழந்தனர்.