ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு
பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம் உலக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.
ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்
பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்துள்ளது.
உடனடியாக அதை சுற்றி வளைத்த பிரான்ஸ் கடற்படை வீரர்கள், கப்பலில் ஏறி அதை சோதனையிட்டனர்.
ட்ரோன்களை அனுப்பும் கப்பல் என சந்தேகம்
விடயம் என்னவென்றால், கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் எல்லைக்குள் மர்ம ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளன.
கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிவரை ரஷ்ய கிராமமான Ust-Luga என்னுமிடத்தில் 801 அடி நீள பிரம்மாண்ட எண்ணெய்க்கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அது அங்கிருந்து புறப்பட்டு செயின்ட் பீற்றர்ஸ்பர்குக்கு அருகிலுள்ள Primorsk துறைமுகத்தை அடைந்தது. அந்த துறைமுகம் பின்லாந்து வளைகுடாவுக்கு எதிரே உள்ளது.
10 மணி நேரம் அங்கு நின்ற அந்தக் கப்பல், பிறகு போலந்து, ஸ்வீடன் கடற்கரைகள் வழியாக செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி டென்மார்க்கை அடைந்தது.
அன்றுதான் டென்மார்க் எல்லைக்குள் மர்ம ட்ரோன்கள் நுழையத் துவங்கின!
ஆக, அந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி அந்தக் கப்பல் பிரான்ஸ் கடற்பகுதிக்குள் நுழைய, உடனடியாக பிரான்ஸ் கடற்படை வீரர்கள் அந்தக் கப்பலை சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில், அந்தக் கப்பல் பணியாளர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |