இறந்த பெண்ணின் உறவினர் என்று கூறி இறுதிச்சடங்குக்கு வந்த பெண்... குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்சில் இறுதிச்சடங்கு ஒன்றிற்கு வந்த அறிமுகமில்லாத ஒரு பெண்மணி, தான் இறந்தவரின் தோழி என்று கூறியபோது யாருக்கும் அவர் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.
ஆனால், வந்த அந்த பெண் சவப்பெட்டியின் அருகிலிருந்து சென்றபிறகுதான் இறந்த பெண்ணின் நெக்லஸ், மோதிரம் மற்றும் கம்மல்கள் ஆகியவை காணாமல் போயிருப்பதை குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் விரைந்து செயல்பட்டதில், Liévin என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த இறுதிச்சடங்கு மையத்தின் அருகிலேயே வாழும் ஒரு பெண் சிக்கினார்.
அவர் வீட்டை சோதனையிட்டபோது, காணாமல் போன நகைகள் கிடைத்ததோடு வேறொரு சுவாரஸ்யமான தகவலும் கிடைத்தது.
அந்த பெண்ணின் வீட்டில், சமீபத்தில் இறந்தவர்களின் இறப்பு அறிவிப்புகளும் கிடைத்தன. அந்த ஆவணங்களில், உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அவர்களது உறவினர்களின் செல்வதற்கான ஆக்சஸ் குறியீடுகளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, இந்த பெண்ணால் அந்த குறியீடுகளை பயன்படுத்தி அந்த அறைகளுக்குள் நுழையமுடியும்!
இதற்கிடையில், அதே நாளில் அதே மையத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட ஆண் ஒருவரின் பர்ஸ் ஒன்றும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவே, அந்த பெண் வழக்கமாகவே இதுபோன்ற திருட்டுக்களில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதையடுத்து பொலிசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.