தங்கப்புதையலை உறவினர்கள் தன்னிடமிருந்து மறைத்ததாக நம்பிய பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்
தன்னிடமிருந்து தன்னுடைய உறவினர்கள் தங்கப்புதையல் ஒன்றை மறைத்ததாக நம்பிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், ஒரு குடும்பத்தையே கோரமாக கொன்று குவித்தார்.
Hubert Caouissin (50) என்பவர், பிரான்சிலுள்ள Orvault என்ற இடத்தில் வாழும் தனது உறவினர்களான Brigitte மற்றும் Pascal Troadec (49), அவர்களது பிள்ளைகளான Charlotte (18), Sebastien (21) ஆகியோரை அவர்கள் வீட்டில் வைத்தே கொலை செய்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் வங்கியிலிருந்து கனடாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கக்கட்டிகளில் ஒரு பகுதி பிரான்சில் உள்ள Brest என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த தங்கக்கட்டிகள் அடங்கிய ஒரு புதையல் தனது உறவினரான Pascalக்கு கிடைத்துள்ளதாகவும் நம்பிய Hubert, அதை Pascal குடும்பம் தன்னிடமிருந்து மறைப்பதாக எண்ணி, Pascalஇன் மொத்த குடும்பத்தையும் கொன்று குவித்துள்ளார்.
பின்னர் மூன்று நாட்கள் செலவிட்டு, அவர்களது உடல்களை துண்டு போட்ட Hubert, உடல்களிலுள்ள சதைப்பகுதியை புதர்களுக்குள் வீசியிருக்கிறார்.
அவற்றை விலங்குகள் சாப்பிட்டுவிடும் என்று கருதிய அவர், தோல், எலும்புகள், கொழுப்பு முதலியவற்றை அவனில் (oven) வைத்து எரித்துள்ளார்.
ஆனால், பொலிசாரிடம் சிக்கியபோது, தான் புதையல் குறித்த தகவல்களை கேட்பதற்காக Pascal வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு நடந்த பிரச்சினையின்போது, தற்காப்புக்காக தனது உறவினர் குடும்பத்தைக் கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
மன நல மருத்துவர்களும், மனோவியல் ஆலோசகர்களும், Hubertக்கு இல்லாதவைகளை இருப்பது போல் நம்பும் நீண்டகால மன நல பிரச்சினை இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். நீதிமன்றத்தில் நடந்த நீண்ட விவாதங்களுக்குப் பின் Hubertக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.