ரஷ்ய எரிவாயுவைத் தவிர்ப்பதற்காக தாமே எரிவாயு தயாரிக்கும் முயற்சியில் பிரான்ஸ் நாட்டவர்கள்
ரஷ்யா அராஜகமாக உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யாவைப் புறக்கணிக்கும் வகையில் அந்நாட்டிடமிருந்து எரிவாயு, எண்ணெய் முதலானவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்துவதென பல நாடுகள் முடிவு செய்துள்ளன.
ஆனால், எரிவாயு வேண்டுமே அதற்கு என்ன செய்வது?
இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறியும் முயற்சியில் பிரெஞ்சு விஞ்ஞானிகள் அல்ல, விவசாயிகளே இறங்கியுள்ளார்கள்.
பாரீஸுக்கு வெளியில் உள்ள பசும்புல்வெளிகளில் தாங்களே இயற்கை எரிவாயு தயாரிக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளார்கள்.
கோதுமை உமி, இனிப்பு பீட்ரூட்டின் சக்கை, வெங்காயத்தோல் முதலிய பொருட்களைக் கொண்டு அவர்கள் விவசாயக் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருக்கிறார்கள் அவர்கள்.
உக்ரைன் போருக்காக ரஷ்யா பயன்படுத்தும் நிதிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் ரஷ்யாவின் எரிபொருட்களை சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஐரோப்பா முயற்சி செய்யும் மற்றொரு பசுமைத் தீர்வாகும் இது.
எங்களுக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறும் உள்ளூர் விவசாயியும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இறங்கியிருப்பவருமான Christophe Robin, ரஷ்ய எரிவாயுவைத் தவிர்க்கவேண்டுமானால், அதற்கு நாம் மாற்று வழிகள் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்கிறார்.