மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படாத மகாராணியாரின் நெருங்கிய தோழி...
மன்னர் சார்லஸ் தன் முடிசூட்டுவிழாவிற்கு தன் சிறுவயது தோழியான சாரா பெர்குசனைத்தான் அழைக்கவில்லை என்று பார்த்தால், தன் தாயாகிய மகாராணியாரின் நெருங்கிய தோழியையும் அழைக்கவில்லையாம்.
மகாராணியாரின் நெருங்கிய தோழி
மன்னர் குடும்பத்தைப் பொருத்தவரை, சிலரைக் குறித்துத்தான் நாம் அறிந்துவைத்துள்ளோம். ஆனால், நாம் அறியாத பலர் ராஜ குடும்பத்தில் உள்ளார்கள்.
அவ்வகையில், மகாராணியாரின் நெருக்கமான தோழி ஒருவர் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படாததைக் குறித்த ஒரு செய்தி வெளியகியுள்ளது.
அவரது பெயர் பமீலா (Lady Pamela Hicks) என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பமீலா மௌண்ட்பேட்டன் (Lady Pamela Mountbatten) என்றும் அவர் அழைக்கப்படுகிறார். ஆம், மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்பின் மாமாவான லூயிஸ் மௌண்ட்பேட்டன் (Louis Mountbatten) என்பவரின் மகள் ஆவார் இந்த பமீலா.
மொத்தத்தில், அவர் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் தோழி மட்டுமல்ல, உறவினரும் ஆவார். அத்துடன், மகாராணியாரின் திருமணத்தின்போது அவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருந்துள்ளார்.
மகாராணியாரின் தோழிக்கும் அழைப்பு இல்லை
ஆக, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண்மணியை மன்னர் தன் முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ள பமீலாவின் மகளான இந்தியா ஹிக்ஸ் (India Hicks), அரண்மனையிலிருந்து தன் தாய்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களே அழைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதால், பமீலாவுக்கு அழைப்பு இல்லை என கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார் இந்தியா.
பமீலாவை முடிசூட்டுவிழாவிற்கு அழைக்க இயலாததற்காக மன்னிப்புக் கோரியதுடன், மன்னர் தன் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் இந்தியா, மன்னர் தன் முடிசூட்டுவிழாவிற்கு அழைக்காததால், பலர் வருத்தமடைந்துள்ளதாகவும், ஆனால், தன் தாய் வருத்தப்படவில்லையென்றும் கூறியுள்ளார்.
சொல்லப்போனால், மன்னருடைய அணுகுமுறை தன் தாய் பமீலாவுக்கு பிடித்திருப்பதாகக் கூறும் இந்தியா, இந்த புதிய ஆட்சியின் நிகழ்வுகளை, தான் ஆர்வமுடன் கவனிக்கப் போவதாக அவர் கூறியதாகத் தெரிவிக்கிறார்.
இன்னொரு முக்கிய விடயம், பமீலாவின் மகளான இந்தியாவும் சாதாரண ஆள் இல்லை, அவர் சார்லஸ் டயானா திருமணத்தின்போது, மணப்பெண்ணின் தோழியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.